சிம்பு மீது கோபம் தனுஷுக்கு இலாபம் – ஐசரிகணேஷ் அதிரடி

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ராயன்.அது அவருடைய ஐம்பதாவது படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார்.
இப்படத்தில், அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.மேலும், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களோடு காளிதாஸ் ஜெயராமும் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் இருக்கிறது..அதோடு இளையராஜா வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இந்நிலையில் இப்போது ஒரு புதியபடத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
அந்தப்படத்தை போர்த்தொழில் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கவிருக்கிறார்.ஐசரிகணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது.
இது செய்தியில்லை.
இந்தப்படத்துக்காக தனுஷுக்கு பட நிறுவனம் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் தொகைதான் செய்தி.
இந்தப்படத்துக்காக அவருக்குக் கொடுப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும் தொகை சுமார் நாற்பத்தைந்து கோடி என்கிறார்கள்.
மிக அண்மையில் எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதியபடத்துக்காக தனுஷ் நாற்பது கோடி சம்பளம் கேட்டார் என்றும் அதனால் அந்தப்படம் நடக்காமல் போய்விட்டது என்றும் சொல்லப்பட்டது.
இப்போது ஐசரிகணேஷ் அவருக்கு நாற்பத்தைந்து கோடி சம்பளம் கொடுக்கிறார் என்பது வியப்புக்குரிய செய்தியாகப் பேசப்படுகிறது.
ஏனெனில், இப்போது எல்லாப் படங்களுக்குமே இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் வியாபாரம் மிகவும் மந்தமாக இருக்கிறது.அப்படியே வியாபாரம் நடந்தாலும் எதிர்பார்த்த தொகை கிடைப்பதில்லை.
கவின் நடித்த ஸ்டார் படம் நன்றாக இருக்கிறது நன்றாக ஓடியது எனும்போதும் அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனையாகவில்லை. அரண்மனை 4,கருடன் ஆகிய படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை அப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனையானது.அதிலும் அப்பட நிறுவனங்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை.
நிலைமை இவ்வாறிருக்கும் நேரத்தில் தனுஷுக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டிருப்பதுதான் வியப்புக்கான காரணம்.ஏனெனில் இந்தச் சம்பளத்தை ஈடுகட்டும் அளவில் வியாபாரம் இருக்குமா? என்கிற ஐயம் எல்லோருக்கும் இருக்கிறது.
அதோடு, இதே நிறுவனம் சிம்புவை வைத்து ஒரு படம் தயாரிப்பதாக இருந்தது. கேட்ட சம்பளத்தைக் கொடுக்காததால் அவர் ஒப்புக்கொண்ட படத்தில் நடிக்கவில்லை.அச்சிக்கல் பெரிதாகி அதுதொடர்பான பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.
சிம்பு கேட்ட சம்பளத்தைக் கொடுக்க மறுத்தவர்கள் தனுஷுக்கு வியாபார மதிப்புக்கு அதிகமாகச் சம்பளம் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
சிம்பு மீதான கோபத்தால் தான் அவருடைய நேரடிப் போட்டியாளராகக் கருதப்படும் தனுஷுக்கு அதிகச் சம்பளம் கொடுத்து படம் எடுக்கிறார் என்று சொல்கிறார்கள்.