லவ்டுடே பட கதைச்சிக்கல் செய்தி – ஒரு வாசகரின் எதிர்வினை
கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் லவ்டுடே.
இப்படத்தின் மையக்கதை பாவலர் அறிவுமதியின் பாடல்வரிகளிலிருந்து எடுக்கப்பட்டதென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்த செய்தி நமது இணையதளத்தில் வெளியானதைப் பார்த்து, கோயம்புத்தூரிலிருந்து ஈசன் என்பவர் எழுதிய ஒரு கடிதம் நமக்கு வந்துள்ளது.
அதில்….
உங்கள் செய்தியைப் பார்த்தேன். கவிஞர் அறிவுமதி அவர்களை அவருடைய படைப்புகள் வழி அவரை அறிந்தவன்.கருத்து வலிமை மிக்க அவரது கவிதைகள் விதைகள் போன்றவை. அவ்விதைகளிலிருந்து பல விருட்சங்கள் வளர்ந்திருக்கின்றன.
இயக்குநர் பாலா இவன்தான் பாலா நூலில் கவிஞர் அறிவுமதியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில்,
புதுசா ஏதாவது சொல்லணும் கலவரப்படுத்தி கவனத்தை ஈர்க்கவேண்டும் என்ற யோசனையிலேயே திரிந்த காலம்.
அறிவுமதியின் அன்பளிப்பான அவரது கவிதைத் தொகுப்பு ஒன்றைத் திறந்தபோது, திரை வரலாற்றில் ஆழச்சுவடு பதிக்க விருக்கும் அன்புத்தம்பி பாலாவுக்கு என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார்.
இவர் ஒருத்தர் நல்ல கதையே இல்லாம அலையறேன், பிறகு எங்கிட்டு ஆழச்சுவடு பதிக்கறது என்ற அலுப்புடன் புரட்டிக் கொண்டே போனபோது அது கண்ணில் பட்டது.
அணு அணுவாய் சாவதற்கு
முடிவெடுத்த பின்
காதல் சரியான வழிதான்
சிக்கியது கதைக்கரு
என்று பதிவு செய்திருக்கிறார்.
அதன்பின் கதைக்களனை அமைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
இதன்படி பார்த்தால் இயக்குநர் பாலாவை தமிழ்மக்கள் அறிவதற்கும் நடிகர் விக்ரம் புகழ்பெறுவதற்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்திருந்தது பாவலரின் இரண்டுவரிகள் என்பது புலனாகிறது.
அதனால்தான், இந்தக்கவிதைதான் சேது படத்தின் கரு என இயக்குநர் பாலா பதிவு செய்திருக்கிறார்.
அதேபோல லவ்டுடே பட இயக்குநர் பிரதீப்ரங்கநாதனும் கவிஞர் அறிவுமதி அவர்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கவேண்டும் என்பதுதான் சரி.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.











