எல் ஐ சி என்கிற பெயர் எல் ஐ கே என்று மாறியது எப்படி? – உண்மைக்காரணம் இதுதான்

‘நானும் ரவுடிதான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இப்போது இயக்கும் படம்
எல் ஐ கே. இப்படத்தில்,’லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்கிறார்.
இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாக தயாராகும் இந்தத் திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தத் திரைப்படத்தில் எல்.கே.விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இப்படத்துக்கு முதலில் எல் ஐ சி என்று பெயர் வைத்திருந்தார்கள்.ஆனால் அந்தப் பெயரை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.அதை நான் தரமாட்டேன் என்று இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் போர்க்கொடி தூக்கினார்.
அதனால் இந்தப்படத்தின் பெயர் எல் ஐ கே என்று மாறிவிட்டதாக நினைக்கலாம்.
ஆனால், உண்மை அது இல்லை.இப்படத்தின் பெயர் எல் ஐ சி என்று வைக்கப்பட்டு அது எஸ்.எஸ்.குமரன் மூலம் சர்ச்சையானது.அதனால் கவனம் பெற்ற ஒரிஜினல் ஓனரான ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தப் பெயரை திரைப்படத்தின் தலைப்பாக வைக்கக் கூடாது மீறி வைத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கை அனுப்பிவிட்டதாம்.( இனிமேல் எஸ்.எஸ்.குமரனும் இந்தப் பெயரைப் பயன்படுத்த முடியாது என்பது தனிக்கதை)
அதனால் அரண்டு போன படக்குழு பெயரை மாற்றி விட்டது.அதனால் லவ் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேசன் எனும் பொருள்பட வைத்திருந்த எல் ஐ சி என்கிற பெயரை லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்று தமிழில் சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் கம்பெனி என்கிற சொல்லுக்கு முதலில் வரும் சி என்கிற ஆங்கில எழுத்துக்குப் பதிலாக கே என்கிற ஆங்கில எழுத்தைப் போட்டு கம்பெனி என்று சொல்லியிருக்கிறார்கள்.
தமிழையே தப்புத் தப்பாக எழுதிக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஆங்கிலத்தையும் தப்பாக எழுதியிருக்கிறார்கள்.