சினிமா செய்திகள்

விஷாலை நம்பினேன் இப்படிச் செஞ்சிட்டாரே? புலம்பும் உதவி இயக்குநர் – விஷால் 31 பட சர்ச்சை

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சக்ரா’. பிப்ரவரி 19- ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தை விஷாலே தயாரித்து நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாதியில் நின்றிருக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடித்து தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இந்தப் படம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் அறிவிப்பை ஏப்ரல் 2 ஆம் தேதி மோஷன் போஸ்டராக வெளியிட்டுள்ளது படக்குழு.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘விஷால் 31’ என அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளராக யுவன், எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தி, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

விஷால் 31 என்று இந்தப்படத்தைக் குறிப்பிடும்போது கூடவே நாட் எ காமன்மேன் என்று ஆங்கிலத்தில் துணைத்தலைப்பு போட்டிருக்கிறார்கள்.

இது கண்டு கொதித்துப் போயிருக்கிறாராம் ஓர் உதவி இயக்குநர். விஜய் என்கிற அவர் விஷாலுடன் சக்ரா உட்பட சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவராம். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் விஷாலை நாயகனாக வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

விஷாலிடம் அந்தக் கதையைச் சொல்லும்போதே இப்போது வெளியிடப்பட்ட மோஷன்போஸ்டரை வடிவமைத்துக் காட்டியிருக்கிறார். அவருடைய கதைக்கான தலைப்பு காமன் மேன்.

இப்போது நாட் எ காமன் மேன் என துணைத்தலைப்புப் போட்டு அவர் வடிவமைத்தது போன்ற மோஷன் போஸ்டரையும் உருவாக்கி வெளியிட்டிருப்பதால் அதிர்ச்சியடைந்த அவர் விஷாலைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லையாம்.

அதனால்… வேறென்ன செய்யமுடியும்? விஷாலை நம்பிச் சொன்னேன், இப்படிச் செஞ்சிட்டாங்களே என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.

Related Posts