February 12, 2025
சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 15 இல் வெளியாகும் படங்கள் – விநியோக விவரம்

தமிழ்த் திரையுலகில் இம்மாதம் அதாவது ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 26 அன்று ராயன் படம் வெளியாகவிருக்கிறது.

இவற்றைத் தொடர்ந்து அடுத்த பெரிய வெளியீட்டுத் தேதி என்றால் அது ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான். அந்த நாளில் அல்லுஅர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வெளியாகவிருந்தது.அப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் அந்தத் தேதியில் பல படங்கள் வெளியாகவிருக்கின்றன.பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது உறுதியில்லை எனும் நிலை.

அதனால் இப்போது,ஆகஸ்ட் 15 அன்று பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்திருக்கும் வணங்கான், அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் டிமாண்டி காலனி 2 மற்றும் கீர்த்திசுரேஷ் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் ரகுதாத்தா ஆகிய மூன்று படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இவற்றில் டிமாண்டி காலனி 2 படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.ரகு தாத்தா படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையயும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடமே கொடுத்திருக்கிறார்களாம்.

டிமாண்டி காலனி 2 படத்தை புதிய தயாரிப்பு நிறுவனமான பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.அந்நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டுக்காக ரெட்ஜெயண்ட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறதாம்.

அதேபோல,கேஜிஎஃப் படத்தைத் தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் ரகுதாத்தா படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறதாம்.

வணங்கான் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை விநியோகஸ்தர் கோவை சுப்பையா பெற்றிருக்கிறார்.இவர் சிம்பு நடித்த மாநாடு படத்தை வெளியிட்டவர். அப்போது ஏற்பட்ட உறவின் காரணமாக இந்தப்படத்தையும் வாங்கி வெளியிடுகிறார் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை வ்லை சுமார் பதினோரு கோடி என்று சொல்லப்படுகிறது.அண்மையில் வணங்கான் பட முன்னோட்டம் வெளியான பின்பு அப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதால் அதில் சம்பந்தப்பட்டோர் உற்சாகமாக இருக்கிறார்கள்.

அதேசமயம், இந்தப்படங்களின் இணைய வெளியீட்டு உரிமை தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன விற்பனை விற்பனை ஆகாமல் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.அது இப்படங்களின் வெளியீட்டில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டாலும் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் மேல் இருப்பதால் அதுவும் முடிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

Related Posts