சினிமா செய்திகள்

டப்பிங் பேச மறுத்த அரவிந்த்சாமி – தலைவி பட சிக்கல்

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இப்போதுவரை முக்கிய கதாபாத்திரங்களின் குரல்பதிவு நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

செயலலிதாவாக நடிக்கும் கங்கணா ரனாவத்துக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஆந்திரப்பெண் ஒருவர் பேசிவிட்டாராம்.

அதற்கடுத்து முக்கிய வேடம் அரவிந்த்சாமிக்கு. எம்.ஜி.ஆராக நடிக்கும் அவர், பேசியபடி சம்பளம் சரியாக வரவில்லை எனக்கூறி குரல்பதிவுக்கு வரமறுத்துவிட்டாராம்.அதன்பின் அவரைச் சமாதானப்படுத்திப் பேச வைத்திருக்கிறார்களாம். அதுவும் முழுமையாக முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

இவ்விரு குரல்களைத்தாண்டி மற்ற முக்கிய தலைவர்கள் குரல்பதிவும் நடக்கவில்லை என்கிறார்கள்.

திரையுலக வழக்கப்படி, குரல்பதிவின்போது நடிகர்களுக்கு சம்பளம் கொடுத்தாக வேண்டும். அப்படிக் கொடுக்காமல் பேசக் கூப்பிட்டதால் பலர் மறுத்துவிட்டார்கள் என்றும் சிலரை இன்னும் அவர்கள் கூப்பிடவே இல்லை என்றும் சொல்கிறார்கள்.

இப்படியே போனால் ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாவது சந்தேகம் என்கிறார்கள்.

என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.

Related Posts