சினிமா செய்திகள்

சிறு முதலீட்டுப் படங்களுக்காக புதியதிட்டம் – கேரள அரசின் முடிவுக்கு சேரன் வரவேற்பு

கொரோனா முதல் அலை பரவத் தொடங்கியது முதலே திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் வெளியீட்டுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் முடங்கின. இதனால் திரைத்துறைக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது. இந்நிலையில், பல படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியானது.

திரையரங்குத் தொழிலுக்கு முற்றிலும் எதிரானது என்றாலும் பொதுமுடக்கத்தால் பல்ர் இணையதளங்களை நாடினார்கள்.

இப்போது,கேரளாவில் மலையாளத் திரைப்படங்களுக்கென பிரத்யேகமாக இணையதளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத் தளம் வரும் நவம்பர் 1 ஆம் தேதி அன்று அறிமுகமாகிறது. மேலும் இந்தத் தளத்தில் வெளியாகும் படங்களின் மூலம் கிடைக்கும் இலாபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் ஒரு பங்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து திரைப்படம் மற்றும் கலாச்சார அமைச்சர் சாஜி செரியன் கூறும்போது,

சிறு பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் உதவுவதால் இது போன்ற ஒரு ஓடிடி தளத்தை நாங்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். அதே நேரத்தில் பெரிய நடிகர்கள் தாங்கள் விரும்பினால் தங்கள் படங்களை இந்தத் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம். மேலும் கேரள அரசின் சித்ராஞ்சலி ஸ்டூடியோஸ் மறுசீரமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடத்தும் அளவுக்கு மேம்படுத்தப்படும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பை இயக்குநர் சேரன் வரவேற்றதோடு தமிழ் மொழிக்கும் தனி இணையதளம் அவசியம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது….

இதுபோன்ற முயற்சி நமது தமிழ்த் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்.

இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.

Related Posts