December 11, 2025
சினிமா செய்திகள்

எதிர்பாரா சிக்கலில் லால்சலாம் – கத்தித் தீர்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் லால்சலாம். 2024 பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் இந்தப்படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட இஸ்லாமிய கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பாரா ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

அது என்ன?

ரஜினிகாந்தை வைத்து சுமார் இருபத்துமூன்று நாட்கள் மும்பையில் படமாக்கப்பட்ட காட்சிகளைக் காணவில்லையாம்.

அங்கு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிஸ்க்கை இங்கு வந்து திறந்து பார்த்தால் காட்சிகள் இல்லையாம்.

இதனால் படக்குழு பேரரதிர்ச்சி அடைந்துள்ளது.

சென்னையில் படத்தின் பணிகளைச் செய்யும் ஆய்வகத்தால்தான் இந்தச் சிக்கல் என்று சொல்லப்படுகிறது. இதனால் அங்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கத்தித் தீர்த்துவிட்டாராம்.

இதன்பின், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மீட்டெடுப்பு மென்பொருளை அமெரிக்காவிலிருந்து வரவழைத்து அவற்றை மீட்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது படக்குழு.

இதில் வெற்றி கிடைத்தால் சிக்கல் இல்லை. இல்லையெனில் மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து இருபத்துமூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்கிற ஆபத்து இருக்கிறது.

ஏற்கெனவே படத்தின் செலவுத்தொகை அதிகரித்திருக்கிறது. இப்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்துவதென்றால் அதற்கு யார் பொறுப்பு? என்கிற கேள்வி இருக்கிறது.

தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்தச் சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படவில்லையெனில் திட்டமிட்டபடி பொங்கல் நாளில் படம் வெளியாவது கஷ்டம்தான் என்கிறார்கள்.

இதனால் ரஜினிகாந்த் உள்ளிட்ட மொத்தப் படக்குழுவும் பதட்டத்தில் பரிதவித்து நிற்கிறதாம்.

நல்லதே நடக்கட்டும்.

Related Posts