சினிமா செய்திகள்

முதல்நாளிலேயே பேட்ட விஸ்வாசம் படங்கள் சந்தித்த அதிர்ச்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட,
சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் சனவரி 10, 2019 அன்று திரைக்கு வந்தன.

தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. வெளிநாடுகளிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.

இந்தநிலையில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் படங்களை இணையதளத்தில் வெளியிட நீதிமன்றத்தில் தடை பெற்று இருந்தனர். ஆனால் அதையும் மீறி இணையதளத்தில் வெளிவந்து விட்டது. அது தவிர இரண்டு பட நிறுவனங்களும் திருட்டுத்தனமாகப் படம் வெளியாவதைத் தடுக்க தனிப்பட்ட முறையில் தீவிர முயற்சி எடுத்தனராம்.

இவற்றை மீறிப் படம் வெளியாகி, உலகம் முழுவதும் ஏராளமானோர் இணையதளத்தில் 2
படங்களையும் பார்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திருட்டு வி.சி.டியையும் புதிய படங்கள் இணையதளங்களில் வெளியாவதையும் தடுக்க தீவிர முயற்சிகள் எடுத்துவருகிறது.

திரையரங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. திரையரங்குக்குள் கேமரா கொண்டு செல்லவும் தடை விதித்தனர். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் இரண்டு படங்களின் வசூலிலும் பாதிப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள்.

Related Posts