November 12, 2026
சினிமா செய்திகள்

விஜய் பட இயக்குநருக்கு வித்தியாச சிக்கல் – விவரம்

விஜய் நடித்த புதிய கீதை,நந்தா நடித்த கோடம்பாக்கம்,சேரன்,பசுபதி உள்ளிட்டோர் நடித்த ராமன் தேடிய சீதை மற்றும் ஆனந்தி நடித்த என் ஆளோட செருப்ப காணோம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே.பி.ஜெகன்,இப்போது ஒரு படத்தை எழுதி இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர்,எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு – சுகசெல்வம்,இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா,படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார்,கலை இயக்கம் – வீரசமர்,பாடல்கள் – கார்த்திக் நேத்தா.

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் எஸ்.கே.செல்வகுமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் கே.பி.ஜெகன் கூறியதாவது….

இப்படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பதுதான் திரைக்கதையின் சுவாரசியம்.ஒவ்வொரு கதைக்களத்திற்கும்,ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும்,மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது.பாடல்களுக்கும்,பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படமாக இது இருக்கும்.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார்.இவர் வடம் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தவர்.மூன்று கதைகளில் ஒரு கதையில் இவர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு,திருச்செந்தூர்,தூத்துக்குடி,மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம்,சென்னை ஆகிய இடங்களில் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

ரோஜா மல்லி கனகாம்பரம் என்று பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் முதல்பார்வையை இயக்குநர் சேரன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஆண்டு வெளியிட்டனர்.

ஓராண்டுக்குப் பிறகு இப்போது,இப்படத்தின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.இப்படத்துக்கு ஜெயில் மேட்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் நிறுவனமும் இயக்குநர் விக்னேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளன.

இந்தத் தகவல்களைத் தாண்டி இப்படத்தில் இன்னொரு சுவையான நிகழ்வு இருக்கிறதாம்.

இயக்குநர் ஜெகன்,தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இப்படத்தை எடுத்திருக்கிறார்.படத்திலும் இயக்குநர் ஜெகனாகவே நடித்திருக்கிறார்.இவர் இயக்குநராக அறிமுகமான முதல்படம் புதியகீதை.அப்படத்தின் நாயகன் விஜய்.எனவே அவர் பெயரைச் சொல்லி சில பல வசனங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றனவாம்.அவர் நடிகராக இருந்தபோது எழுதப்பட்ட அந்த வசனங்கள் எல்லாம் இப்போது அவர் முதல்வரான பின்னர் வேறு அர்த்தம் தருவதுபோல் இருக்கின்றனவாம்.எனவே அவற்றை அப்படியே வைப்பதா? மாற்றுவதா? என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் இயக்குநர் ஜெகன்.வித்தியாசமான சிக்கல்தான்.

Related Posts