சினிமா செய்திகள்

அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் படம் தயாரிக்கும் ஏவிஎம் – அதில் ஒரு சிக்கல்

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், அறிவழகன் இயக்குநராக அறிமுகமான படம் ‘ஈரம்’. ஆதி, சிந்து மேனன், சரண்யா மோகன், நந்தா, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் என பார்வையாளர்களைப் படம் கட்டிப் போட்டது.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’,பார்டர் மற்றும் அண்மையில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் இணையத் தொடர் ஆகியனவற்றை இயக்கியுள்ளார் அறிவழகன்.

தமிழ்ராக்கர்ஸ் இணையத் தொடரை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்போது, ஏவிஎம் தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகவிருக்கிறதாம்.ஏவிஎம் நிறுவனம் தயாரித்த முதல் இடம் என்கிற படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் அந்நிறுவனம் படத்தயாரிப்பில் இறங்காமல் இருந்தது.

தமிழ்ராக்கர்ஸ் இணையத்தொடர் மூலம் ஏற்பட்ட உறவு காரணமாக, அறிவழகனின் ஈரம் படத்தின் இரண்டாம்பாகத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.

ஈரம் 2 படத்தை அறிவழகன் எடுக்கவேண்டுமெனில் இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏற்கெனவே முன்பணம் வாங்கியுள்ள இன்னொரு பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆகிய இடங்களில் தடையில்லாச் சான்று வாங்கிவிடுங்கள் என்று ஏவிஎம் தரப்பில் சொல்லியிருக்கிறார்களாம்.

ஏனெனில், அவர் இயக்கிய பார்டர் படம் சம்பந்தமாக நடிகர் ஆதி புகார் தெரிவித்து அது சர்ச்சையானது போல், ஈரம் 2 என்று அறிவித்தவுடன் இதை நாங்கள் தயாரிப்பதாக இருந்தோம் அதற்காகச் செலவு செய்திருக்கிறோம் என்று யாரும் பஞ்சாயத்தைக் கூட்டிவிடக்கூடாது என்பதில் ஏவிஎம் நிறுவனம் தெளிவாக இருக்கிறதாம்.

இதனால் இப்போது சம்பந்தப்பட்ட இடங்களில் தடையில்லாச் சான்று பெறும் முயற்சியில் இருக்கிறார் அறிவழகன்.

அந்த வேலை முடிந்ததும் ஈரம் 2 அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

Related Posts