சினிமா செய்திகள்

டிமாண்டி காலனி 3 பட விநியோகஸ்தர் மீது தயாரிப்பாளர் புகார் – விவரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி,பிரியா பவானி சங்கர்,குரு சோமசுந்தரம்,மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திகில் திரைப்படம் டிமான்டி காலனி 3.

இப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஃபைவ்ஸ்டார் செந்தில் பெற்றிருந்தார்.எம்ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் இந்த வியாபாரம் நடந்திருக்கிறது.அதற்கான விலை சுமார் 18 கோடி என்று பேசி சுமார் ஐந்து கோடி முன்பணம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,இப்போது திடீரென தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் இடையே கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டது.இதனால்,தயாரிப்பாளர் சுதன்சுந்தரம் விநியோகஸ்தர் ஃபைவ்ஸ்டார் செந்தில் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.

ஏன்? என்ன நடந்தது?

இந்தப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்த நேரத்தில் வேறெந்தப்படமும் அந்தத் தேதியில் வெளியாகும் என்று சொல்லப்படவில்லை.

ஆனால்,அதன்பின் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் 2 மற்றும் சூரி நடித்திருக்கும் மண்டாடி ஆகிய இரண்டுபடங்களும் செப்டம்பர் பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டன.

ஒரேநாளில் மூன்று பெரியபடங்கள் வெளியானால் அது எல்லோரையும் பாதிக்கும் என்பது வியாபாரவட்டத்தினரின் கருத்து.அதனால் முதலில் அறிவித்த டிமாண்டி காலனி 3 படத்தோடு ஏதாவது ஒருபடம் மட்டும் வந்தால் நல்லது என நினைத்து அந்தப்படக்குழுவினர்களுடன் பேச்சு நடத்தியிருக்கிறார்கள்.ஆனால்,அவ்விரு படக்குழுவினரும் நாங்களும் அதேதேதியில்தான் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டார்களாம்.

இதனால்,அந்தத் தேதியில் மூன்று படங்களும் வெளியாகும் எனும் நிலையில்,எம்ஜிக்கு வாங்கிய ஃபைவ்ஸ்டார் செந்தில்,இதற்காகக் கொடுக்கும் பணத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதால்,எம்ஜி என்பதை டிஸ்டிரிபியூசன் என்று மாற்றித்தர தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.

அதை தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.சொன்னபடி எம்ஜி அடிப்படையில் படத்தை வாங்குவதனால் வாங்கிக் கொள்ளட்டும் டிஸ்டிரிபியூசன் அடிப்படைதான் என்றால் இவருக்குத் தரமாட்டேன் அதோடு,வாங்கிய் முன்பணத்தையும் திருப்பித் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

விநியோகஸ்தர் ஃபைவ்ஸ்டார் செந்தில் தரப்போ,அந்தத் தேதியில் வெளியாகும் மற்ற இரண்டு படங்களும் விநியோக அடிப்படையில்தான் வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது.இலாபமோ நட்டமோ நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம் என்று அந்தத் தயாரிப்பாளர்கள் முன்வந்திருக்கிறார்கள்.இவர் மட்டும் மொத்தப்பொறுப்பையும் எங்கள் மீது சுமத்துவது நியாயமா? என்று கேட்கிறதாம்.

தயாரிப்பாளரின் புகாரை வாங்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்,அதை விந்யோகஸ்தர்கள் சங்கத்துக்கு அனுப்பியிருக்கிறதாம்.அவர்கள் தரும் பதிலைப் பொறுத்து இறுதிமுடிவு எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் சொல்கிறார்கள்.

என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts