September 26, 2026
விமர்சனம்

டோரதி – திரைப்பட விமர்சனம்

1980 ஆம் ஆண்டுகளில் மதுரையில் நடக்கும் கதை.ரிஷிகாந்த்,சனந்த் ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.வயதுவந்த பிறகு அடிதடி,ஆர்ப்பாட்டம் என இருக்கிறார்கள்.ஒருகட்டத்தில் பிரிகிறார்கள்.பிறகு இருவரும் சந்திக்கும் சூழல் வருகிறது.அது அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.அது என்ன?அதன்பின் என்ன? என்பதைச் சொல்வதுதான் டோரதி.

டோரதி என்கிற சொல்லுக்குக் கடவுளின் பரிசு என்று பொருள் சொல்லப்படுகிறது.

நாயகர்களாக நடித்திருக்கும் ரிஷிகாந்த்,சனந்த் ஆகிய இருவரும் சுப்பிரமணியபுரம் படத்தில் பார்த்த மதுரை இளைஞர்களைப் பிரதிபலித்திருக்கிறார்கள்.கோபம்,வேகம்,ஆக்ரோசம் என எல்லாவற்றையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இருவரில் சனந்த்துக்கு ஏற்படும் உடல் மற்றும் உளரீதியான மாற்றங்களும் அவற்றை அவர் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கும் விதமும் நன்று.

மாற்றத்துக்கு உள்ளான நண்பனை எதிர்கொள்ளமுடியாமல் தவிக்கும் வேடத்தை ரிஷிகாந்த்தும் சிறப்பாகச் செய்துள்ளார்.

படத்தின் தலைப்பில் இருக்கும் டோரதியாக நடித்திருக்கும் கீர்த்திசுரேஷ்,நாயகன் சனந்த்துக்கு அண்ணியாக அந்தக்குடும்பத்துக்குள் வருகிறார்.அவருடைய காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பும் இருப்பும் நிறைவு.

சனந்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் முத்துக்குமாரின் வேடமும் அவர் நடிப்பும் மிக இயல்பாக இருக்கிறது.இப்படியெல்லாம் இருக்கிறார்களே என்கிற எண்ணம் பயமுறுத்துகிறது.

ராமச்சந்திரன் துரைராஜ்,கஜராஜ்,ராம்ஸ்,ஜீவா,செளந்தரராஜா ஆகியோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

எண்பதுகளில் நடக்கும் கதை என்பதால் அக்காலகட்டத்தைத் திரையில் கொண்டுவர பாடுபட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு.அவருடைய உழைப்பால் படம் பலம் பெற்றிருக்கிறது.

இளையராஜா இசையமைத்திருக்கிறார்கள்.பாடல்கள் சுகம்.பின்னணி இசை எப்படி இருக்கவேண்டும் என்கிற பாடத்தை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை வலுப்படுத்தும் விதமாக,காட்சி நடக்கும் களத்தின் சூழலையே பயன்படுத்தி பின்னணி இசைத்து வியக்க வைத்திருக்கிறார்.

படத்தைத் தொகுத்திருக்கும் கணேஷ்சிவாவுக்கு மிகவும் சவாலான பணியை திறம்படச் செய்து படத்தை குழப்பமின்றி கொண்டு சென்றிருக்கிறார்.

இப்படத்தின் கதையை சரவணன் சந்திரனும் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.அதற்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

வடசென்னை என்றால் எப்படிப்பட்ட ஒரு சித்திரம் பொதுப்புத்தியில் இருக்கிறதோ? அதேபோன்றதொரு சித்திரத்தை மதுரை மீதும் வரைந்து கொண்டேயிருக்கிறது தமிழ்த்திரையுலகம்.அதன் தொடர்ச்சியாக இந்தப்படமும் இருக்கிறது.

ஆணாதிக்கம்,ஆணவக்கொலை ஆகியனவற்றிற்கு எதிராகப் பேசியிருக்கும் இயக்குநர்,அதை இன்று உலகளாவிய பேசுபொருளாக இருக்கும் ஒரு இயற்கைச் சிக்கலுடன் கலந்திருக்கிறார்.

– இளையவன்

Related Posts