அகத்தியா – திரைப்பட விமர்சனம்
பேய்ப்படங்களுக்குக் குறைந்தபட்சப் பாதுகாப்பு உண்டு என்பதால்,அதை மையமாகக் கொண்டு அதனுடன் பழங்காலம்,சித்தமருத்துவம்,அரிய மருந்து உள்ளிட்ட விசயங்களைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் அகத்தியா.
திரைப்படத்துறையில் கலை இயக்குநராக இருக்கும் நாயகன் ஜீவா,ஒரு பழங்கால அரண்மனையை வாடகைக்கு எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து காட்சிப்பொருளாக்க முனைகிறார்.அப்போது நடக்கும் சில அதிரடி நிகழ்வுகள் அவற்றின் விளைவுகள் ஆகியனதாம் படம்.
நாயகன் ஜீவாவுக்கு இந்த வேடம் புதிதில்லை என்பதால் மிக அநாயசமாக நடித்திருக்கிறார்.அமானுஷ்யம் எனப்படும் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட உண்ர்வுகளில் ஆட்படுவதும் அதிலிருந்து விலகி ஓடாமல் அது என்னவென ஆராய்வதும் அதற்குள் அம்மா பாசத்தை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அமைந்திருப்பதும் அவருடைய நடிப்புக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.
நாயகி ராஷிகண்ணாவுக்கு,நாயகனுக்கு உதவியும் உபத்திரமும் செய்கிற வேடம்.அதைப் பொறுப்பாகச் செய்திருக்கிறார்.
சித்தமருத்துவ ஆய்வாளராக நடித்திருக்கும் அர்ஜூன் நடித்திருக்கிறார்.அவருடைய பிம்பம் அந்த வேடத்தை உயர்த்திக் காட்ட் பெரிதும் உதவியிருக்கிறது.
சாரா,இந்துஜா,ரோகினி,செந்தில்,பூர்ணிமா பாக்யராஜ், யோகிபாபு, விடிவி கணேஷ் உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.எல்லோரையும் அளவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் நன்று.என் இனிய பொன் நிலாவே மறுபதிப்பு மிக நன்று.பின்னணி இசை கதைக்களத்துக்குப் பக்க பலமாக அமைந்திருக்கிறது.
தீபக்குமார் ஒளிப்பதிவும் கணினி வரைகலைக் காட்சிகளும் பல நல்ல காட்சியனுபவங்களைக் கொடுக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் பா.விஜய்.1040 காலகட்டத்தைக் காட்சிப்படுத்த நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.அந்தக் காலகட்டத்தை இப்போதைய காலகட்டத்தோடு இணைக்கும் புள்ளி ஏனோதானோவென இல்லாமல் வலிமையானதாக இருக்கிறது.மருத்துவமும் மருந்துகளும் உலகை ஆளும் இக்காலத்தில் தமிழ் மருத்துவமுறையான சித்த மருத்துவ முறை ஆகச் சிறந்தது என்கிற கருத்தை அழுத்தமாக நிறுவ முனைந்திருக்கிறார்.
நல்ல கருத்து என்றாலும் அதைக் காட்சி ஊடகத்தில் சொல்கிறோம் என்பதை முழுமையாக உணர்ந்து அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.அவற்றில் உண்மைக்கு மாறான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும் சுவாரசியமான காட்சி அனுபவங்கள் கிடைக்கின்றன.
– வெற்றி











