இஞ்சிவெல்லம் தள்ளிப்போகிறது – ஏன்?
விஜய்சேதுபதியும் சாய்பல்லவியும் இணைந்து நடித்திருக்கும் இஞ்சி வெல்லம் படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார்.
இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.வங்காளத்தில் புகழ்பெற்ற அவிக் முகோபாத்யா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது.அங்கு ஜூலை இறுதிவரை படப்பிடிப்பு நடந்திருக்கிறது.அதன்பின்,சென்னை புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
தொடங்கும்போது பெயரிடப்படாமல் இருந்த இந்தப்படத்துக்கு ‘இஞ்சி வெல்லம்’ என்று பெயரிடப்பட்டது.செப்டம்பர் 7 அன்று இந்தப்பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே இந்தப்படத்தைத் தயாரிக்கிறது.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.இருந்தாலும்,படத்தயாரிப்பு,வியாபாரம்,விநியோகம் ஆகிய எல்லா வேலைகளையும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே செய்கிறதாம்.
இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
இப்படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் திருநாளில் வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பொங்கலுக்கு வருமென்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் தர்மன் திரைப்படம் தள்ளிப்போகும் என்பதால் இப்படத்தை பொங்கல் விடுமுறையில் வெளியிட்டுவிடலாம் என்பது மணிரத்னத்தின் கணக்கு என்கிறார்கள்.
ஆனால்,இப்போது பொங்கல்நாளிலிருந்து தள்ளிப்போய் காதலர் நாளையொட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஏன்?
இது முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய படம் என்று வெளியில் சொல்லப்பட்டாலும் உண்மை வேறொன்றாக இருக்கிறது என்கிறார்கள்.
என்ன உண்மை?
பொங்கலையொட்டி தெலுங்கில்,சிரஞ்சீவி,வெங்கடேஷ் ஆகியோரது படங்கள் உட்பட மூன்று படங்கள் வெளியாகவிருக்கின்றனவாம்.
பொதுவாக மணிரத்னம் படங்களுக்கு அமெரிக்கா,ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல வியாபாரம் இருக்குமாம்.அங்குள்ள விநியோகஸ்தர்கள் எல்லாம்,இங்கு தெலுங்குப்படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.மூன்று தெலுங்குப்படங்கள் வரும்போது உங்கள் படம் வந்தால் நீங்கள் கேட்கிற விலையைக் கொடுக்கமுடியாது.தள்ளி வந்தால் எதிர்பார்ப்பதைவிடக் கொஞ்சம் கூடுதலாகவே கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.இன்னும் சொல்லப்போனால்,பொங்கலன்று வந்தால் ஒரு ரூபாய்,சனவரி கடைசியில் வந்தால் இரண்டு ரூபாய்,பிப்ரவரியில் வந்தால் மூன்று ரூபாய் என்றே சொன்னார்களாம்.
அதைக்கேட்ட மணிரத்னம்,அப்படியே செய்வோம் என்று சொன்னதோடு படத்தை பிப்ரவரியில் வெளியிடும் முடிவை எடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
மணிரத்னம் நல்ல படைப்பாளி என்று கொண்டாடுவோர் உண்டு.நல்ல வியாபாரியும் கூட என்பதற்கு இதுவே சான்று என்கிறார்கள்.












