சினிமா செய்திகள்

திரையரங்குகள் திறப்பு – ரஜினிக்கு தயாரிப்பாளர் காட்டமான கேள்வி

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாத மத்தியில் தொடங்கி படிப்படியாகத் திரையரங்குகள் மூடப்பட்டன. மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.அதன்பின் சில நாட்களில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன.

ஏழாம்கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதோடு முடியும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் செப்டெம்பர் 30 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

அதேநேரம் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தத் தளர்வுகளில் திரையரங்குகள் திறக்க அனுமதி இருக்கும் என்று திரைத்துறையினர் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் திரையரங்குகள் திறக்க அனுமதியில்லை என்கிற அறிவிப்புதான் வந்துள்ளது.

இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதன்காரணமாக சமூகவலைதளமான டிவிட்டரில், #SupportMovieTheatres என்கிற குறிச்சொல்லை உருவாக்கி திரையரங்குகள் திறக்கக் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

அந்தக் குறிச்சொல்லில், துருவ்விக்ரம் நடித்த வர்மா, ஆதித்யவர்மா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் மேத்தா வெளீயிட்டுள்ள பதிவில், இந்தி, தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இருக்கும் ஒரு சூப்பர்ஸ்டார் கூட நான்காம்கட்டத் தளர்வுகளில் திரையரங்குகள் திறக்காமல் இருப்பது குறித்த வருத்தத்தை வெளிப்படுத்தவில்லை.திரையரங்குகளில் கூடிய கூட்டத்தினால்தான் அவர்கள் சூப்பர்ஸ்டார்கள் ஆனார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா? என்று காட்டமாகக் கேட்டுள்ளார்.

அவருடைய இந்தக்கருத்துக்கு ஆதரவு பெருகுகிறது.

Related Posts