விமர்சனம்

மம்மி சேவ் மீ – திரைப்பட விமர்சனம்

கோவாவின் அழகிய கடற்கரையோரம் இருக்கும் பெரிய வீட்டிற்கு கணவர் அகால மரணமடைந்த சோகத்துடனும் அம்மா,தங்கை மற்றும் ஆசைமகளுடன் வந்து குடியேறுகிறார் நாயகி பிரியங்கா. அவர் ஏழுமாத கர்ப்பிணி  என்பது கூடுதல் தகவல்.

அழகு  என்றாலும் ஆபத்து நிறைந்திருக்கிறது அந்த வீட்டில்.அங்கு  ஒரு பேய் இருக்கிறது. அதனால் பல சிக்கல்கள்.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதைத் திகிலுடன் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகி பிரியங்கா கர்ப்பிணியாகவும் இருப்பதால் கண்களிலும் உடல்மொழியிலும் பயத்தை வெளிப்படுத்துகிறார்.

பிரியங்காவின் ஆறு வயது மகளாக நடித்திருக்கும் யுவினா நல்ல தேர்வு. அழகு முகம் அச்சத்தில் உறையும் காட்சிகள் சரியாக அமைந்திருக்கின்றன.

பிரியங்காவின் அம்மாவாக நடித்திருக்கும் வத்சலா, தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ஷிந்தகி ஆகியோருக்கு அதிக வேலையில்லை. 

அருட்தந்தையாக வரும் மதுசூதனன் கவனிக்க வைக்கிறார். பெரும் சிக்கலைப் பதட்டமில்லாமல் கவனமாகக் கையாள்வது நன்று.

வேணுவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்குப் பலம் சேர்க்கின்றன. மாடிப்படிக்கட்டுகளைப் பல கோணங்களில் காட்டிப் பயமுறுத்துகிறார்.

அஜினேஷ் லோக்நாத்தின் இசையும் தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறது. 
 
ஒரு பெரியதனிவீடு என்றதுமே பேய்க்கதைக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடக்கின்றன. பகலில் நடந்தாலும் மின்சாரம் போய் இருள் சூழ்ந்துவிடுகிறது. 

கதவு ஜன்னல்கள் படபடவென அடிப்பது, பூனை ஓடுவது,திடீரென முகமெல்லாம் இரத்தத்துடன் ஆட்கள் வருவது போன்ற க்ளிஷே காட்சிகள் சலிப்பூட்டுகின்றன.

வழக்கமான பேய்ப்படங்களின் இறுதிக்காட்சிகள் போலன்றி வித்தியாசமான முடிவை வைத்திருக்கிறார் இயக்குநர் லோஹித்.

திகில் படப் பிரியர்களுக்கு நல்ல தீனி. 

Related Posts