விமர்சனம்

ஷூட் த குருவி – குறும்பட விமர்சனம்

குருவிராஜன் என்கிற தாதாவை மையமாகக் கொண்ட கதை என்பதால் இந்தப் பெயர். நடிகர் அர்ஜை குருவிராஜன் என்கிற தாதாவாக நடித்திருக்கிறார்.காவல்துறைக்கு தண்ணிகாட்டும் தாதா அவர்.

அவரை வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒர் சாமான்யனாக நடித்திருக்கும் ஆஷிக்ஹுஷைன் ஒருகட்டத்தில் தாக்கிவிடுகிறார்.

காவல்துறையே பயப்படும் ஒருவரை சாதாரண ஒரு ஆள் தாக்கினால் என்னவாகும்?

இவ்வளவு பதட்டமான கதையை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ஷூட் த குருவி.

தாதாவாக நடித்திருக்கும் அர்ஜைக்கு இந்தப்படம் நல்லபெயரைப் பெற்றுத்தரும் என்பதில் மாற்றமில்லை.அந்த அளவுக்கு கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார்.

அறுவைசிகிச்சைக்குப் பணமில்லாமல் வாழ்க்கையை வெறுத்திருக்கும் வேடத்தில் நடித்திருக்கும் ஆஷிக்ராஜன், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தாதாவைத் தாக்கிவிட்டோம் என்று உணர்ந்து பயந்து நடுங்கும் காட்சிகள் நன்று.

நகைச்சுவை நடிகர் ஷாரா சும்மாவே சிரிக்க வைப்பார். இந்தப்படத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் வேடத்தில் இன்னும் கூடுதலாகச் சிரிக்க வைக்கிறார்.

சுரேஷ்சக்ரவர்த்திக்கு முக்கிய வேடம். அவருடைய தோற்றம் அந்த வேடத்துக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரசண்டன் சுஷாந்த், கிடைக்கும் நெருக்கடியான இடங்களிலும் தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.

மூன்ராக்ஸ் இசை நகைச்சுவைக்காட்சிகளுக்கு மேலும் பலமாக அமைந்திருக்கிறது.

கே.கமலக்கண்ணனின் படத்தொகுப்பு படத்தைத் தொய்வில்லாமல் நகர்த்துகிறது.

எழுதி இயக்கியிருக்கும் மதிவாணன், ஜாலியாக ஒரு படத்தைக் கொடுத்து மக்களைச் சிரிக்க வைக்கவேண்டுமென நினைத்து அதைச் சரியாகச் செயல்படுத்தியும் இருக்கிறார்.

– ரத்தீஷ்

ஒருமணி நேரத்துக்கும் சற்று அதிகமாக இருக்கும் இப்படம் SHORTFLIX தளத்தில் மார்ச் 17 முதல் காணக்கிடைக்கிறது.

Related Posts