சினிமா செய்திகள்

பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் தெலுங்கின் முன்னணி நாயகி கீர்த்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா.

சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கும் இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முழுமையடையாமல் சென்னை திரும்பியது படக்குழு.

அப்போதிருந்து, இப்படம் இனிமேல் நடக்குமா? என்கிற சந்தேகத்தைக் கிளப்பிவந்தார்கள். அதன்பின், இந்தப்படம் முற்றாக நின்றுவிட்டது என்றே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

இதுகுறித்து படக்குழுவினரிடம் நாம் விசாரித்தபோது, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக கோவா செல்லவிருக்கிறோம் என்று சொன்னார்கள்.

ஆனாலும் பொய்ச்செய்திகள் ஓய்ந்தபாடில்லை.

அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சூர்யா.

அவர் இன்று மதியம் இரண்டு மணியளவில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்….

மீண்டும் படப்பிடிப்புக்கு வரக் காத்திருக்கிறேன்…!! #சூர்யா41 என்று சொல்லியிருக்கிறார். அதோடு அவரும் இயக்குநர் பாலாவும் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

Related Posts