சினிமா செய்திகள்

விக்ரம் வழியில் விஜய்ஆண்டனி – புதியபடம் தொடக்கம்

சசிகுமார்,ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், 2023 மார்ச் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் அயோத்தி.மதங்கள் கடந்த மாந்தநேயம் பேசிய அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்தப்படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்தபடம் இன்று தொடங்கியிருக்கிறது.

அயோத்தி படம் வெளியானவுடனே மந்திரமூர்த்தி இயக்கத்தில் ஒருபடம் தயாரிக்க பிரபல நிதியாளர் மதுரை அன்பு முன்வந்தார்.ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் நடக்கவில்லை.

இப்போது,குட்ஷோ படநிறுவனம் மந்திரமூர்த்தி இயக்கும் படத்தைத் தயாரிக்கிறது.இந்தப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் தொடக்கவிழா மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்தது.அதைத் தொடர்ந்து படப்பிடிப்பும் இன்றே தொடங்கியிருக்கிறது.

ஓர் அப்பாவும் மகளுக்குமான உணர்வுப்பூர்வமான கதை மற்றும் திரைக்கதை நடிகர் விஜய் ஆண்டனிக்கு மிகவும் பிடித்திருந்ததால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

அதோடு,இந்தப்படத்தில் நடிப்பதற்கான சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது,தயாரிப்புத் தரப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டாராம்.

அது என்ன கோரிக்கை?

இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தின் வியாபாரம் நடக்கும் நேரத்தில் வியாபாரத்தில் பங்கு என்கிற அடிப்படையில் நடிக்கவேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை.

அதை அப்படியே ஏற்றுக்கொண்டாராம் விஜய் ஆண்டனி.

அவர் ஒப்புக்கொண்டதும் படத்தின் வேலைகள் வேகமாக நடக்கத் தொடங்கி இன்று படப்பிடிப்பு தொடங்கும் நிலைக்கு வந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

வரிசையாக ஐந்தாறு படங்கள் தோல்வி அடைந்திருந்த நிலையில் அண்மையில் வெளியான நூற்சாமி நிச்சயம் பெரியவெற்றி பெறும் என்று நம்பிக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி.அந்தப்படமும் தோல்வி அடைந்ததால் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பார் என்கிற விமர்சனங்களும் கூடவே வரத்தொடங்கிவிட்டன.

ஆனால்,நூறுசாமி படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இந்த நடைமுறைக்கு விஜய் ஆண்டனி ஒப்புக்கொண்டார்.நூறுசாமி நன்றாக ஓடியிருந்தாலும் இதிலிருந்து அவர் பின்வாங்கியிருக்க மாட்டார் என்று அவர் தரப்பில் சொல்லப்படுகிறது.

அண்மையில்,சதய்ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்தசங்கர் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் படம் தொடங்கியது.அந்தப்படத்தில் நடிக்க குறைந்த அளவில் சம்பளம் பேசி,மீதியை வியாபாரம் நடக்கும்போது வாங்கிக்கொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டார் விக்ரம்.

அதனால் பல மாதங்களாக இழுத்துக் கொண்டிருந்த அந்தப்படம் தொடங்கியது.அவர் வழியில் இப்போது விஜய் ஆண்டனியும் வந்திருப்பதால் இந்தப்படம் தொடங்கிவிட்டது என்கிறார்கள்.

இது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி,ஒட்டுமொத்த திரைத்துறைக்கே நல்லசெய்தி என்கிறார்கள்.

Related Posts