என் கதாபாத்திரம் எனக்குப் பிடிக்க இதுதான் காரணம் -அர்ஜுன்தாஸ் வெளிப்படை
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ்,
அன்னா பென்,யோகிபாபு,வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம்,ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது.
ஆக்ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி,அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து,கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல்களையும்,தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல்,இரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதிலளித்தார். அந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் இங்கே…
நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் பத்திரிகையாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.அந்த கருத்துகள் எனது அடுத்தடுத்த படத்தேர்வுகளிலும்,நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.என்ன மாதிரியான கதைகளில் நடிக்கவேண்டும்,எந்த மாதிரியான நடிப்பை இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்.
எனது பெற்றோரும்,என் படம் வெளியான பிறகு ஊடகங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆர்வமாகக் கேட்பார்கள்,இரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய நேர்மறையான கருத்துகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்வேன்.
கான் சிட்டி படம்,குடும்பத்தோடு அமர்ந்து இரசிக்கக்கூடிய அழகான,மகிழ்ச்சியான திரைப்படம்.கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை.ஆனால் ஒரு குடும்பம்,அவர்களது வாழ்க்கை,அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள்,நகைச்சுவை மற்றும் சந்தோசமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்.
இந்தப்படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான,நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது.கடன்கள், குடும்பப் பொறுப்புகள்,வாழ்க்கைச் சவால்கள் என பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம்.அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
தற்போது பல்வேறு வகையான கதைகளிலும்,கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறேன்.நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவை,குடும்பம்,உணர்வுபூர்வம் என பல விதமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன.புதிய இயக்குநர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களைத் தருகிறது.அதனால் இந்தப்பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்கிருந்து என் திருமணச் செய்தி வந்தது என்று எனக்கே தெரியவில்லை.வீட்டிலும்,உறவினர்களும் தொடர்ந்து அதைப்பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஆனால் உண்மையில் நிச்சயதார்த்தமோ,திருமண ஏற்பாடுகளோ எதுவும் இல்லை.
திரையரங்குகளுக்குச் சென்று நேரடியாக இரசிகர்களைச் சந்திக்கும்போது குறிப்பாக குடும்ப இரசிகர்களும்,மூத்த பெண்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களில் அதிகம் நடிக்கவேண்டும் என்று கூறுவார்கள்.அதனால்தான் தற்போது குடும்ப இரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளையும் அதிகமாகத் தேர்வு செய்து வருகிறேன்.
கான் சிட்டி படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது.அவர்களுடைய அர்ப்பணிப்பு,ஒழுக்கம்,காட்சிகளுக்கான தயாரிப்பு ஆகியவை எனக்கு புதியபாடங்களைக் கற்றுக்கொடுத்தன.அதுவே ஒரு நடிகராக என்னைத் தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்கிறது.
நான் நடித்த எதிர்மறை வேடங்கள் அனைத்தும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவற்றின் பின்னணியில் இருந்த உணர்வுப்பூர்வமான காரணங்கள்தான்.நான் நடித்த பல நெகட்டிவ் கதாபாத்திரங்களைப் பார்த்தால், அவர்கள் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். ஒருவன் தன் சகோதரனுக்காகச் செய்கிறான், இன்னொருவன் தனது கடந்தகால காயங்களால் அந்தப்பாதையைத் தேர்ந்தெடுக்கிறான்.அதனால் பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரங்களை வெறுப்பதைவிட புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்.ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கும் ஒரு வலுவான பின்னணிக் கதை இருக்கவேண்டும்.ஏன் அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்பதை இரசிகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரம் மனதில் நிற்கும்.முழுக்க முழுக்க இருண்ட கதாபாத்திரமாக இருந்தாலும்,அது கதைக்குள் சரியாகப் பொருந்தவேண்டும்.ஏன் அவர் அப்படி நடந்துகொள்கிறார்? என்பதை இரசிகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரம் மனதில் நிற்கும்.
இனியும்,ஒரு நல்ல எதிர்மறை கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாகச் செய்வேன்.ஆனால் தற்போது அப்படிப்பட்ட எந்தத் திட்டமும் கைவசம் இல்லை.கதையும்,கதாபாத்திரத்தின் ஆழமும் முக்கியம்.
உலக சினிமாவில் ஹீத் லெட்ஜர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானது,தமிழ் சினிமாவில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி ஏற்றிருந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வில்லன் வேடம்.அது என்னை மிகவும் கவர்ந்தது.
நல்லகதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் எந்தவகை வேடமாக இருந்தாலும் ஏற்கத்தயாராக இருக்கிறேன்.
தற்போது உருவாகி வரும் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் தலைப்பு வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.அதை இப்போது சொல்லமுடியாது.படம் வெளியாகும்போது இரசிகர்களுக்கே அதற்கான பதில் கிடைக்கும்.
இப்போது,பல புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.அடுத்தடுத்த காலங்களில் வித்தியாசமான கதைகளுடன் இரசிகர்களைச் சந்திக்கவுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.













