செய்திக் குறிப்புகள்

ராகவாலாரன்சின் நற்பணி – உதவும் ஓவியா

பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோயில் என்று சொல்லலாம்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்கப் பள்ளிகள் தான்.

அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியைக் கற்க முடியும்.

அண்மையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விட்டிருந்தார்.

அரசாங்கப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ மாணவிகள் பள்ளிகளைத் தத்தெடுத்து சீரமைத்துத் தந்தால் உதவியாக இருக்கும் என்று சொல்லி இருந்தார்.

அதைக் கேட்ட ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்கப் பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார்.

பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளைச் சீரமைத்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றிக் கொடுத்திருக்கிறார்.

செஞ்சி அருகிலுள்ள மேல்மலையனூர் பக்கத்தில் உள்ள அரசாங்கப் பள்ளிக்குக் கழிப்பிடம் மற்றும் சிதிலமடைந்த பகுதிகளைப் புதுப்பித்து வர்ணம் அடித்து புதுக் கட்டிடம் மாதிரி மாற்றி இருக்கிறார்.

அக்டோபர் 29 ம் தேதி (இன்று) ராகவாலாரன்ஸுக்கு பிறந்த நாள் என்பதால் பள்ளியின் திறப்பு விழாவை வைத்திருக்கிறார்கள் அந்தப் பள்ளி நிர்வாகத்தினர்.

லாரன்ஸின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் லாரன்ஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு நடிகை ஓவியாவை விழாவில் கலந்து கொள்ள வைத்துள்ளார்.

29 ம் தேதி மாலை 4 மணி அளவில் ஓவியா செஞ்சி மேல் மலையனூர்பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

இது பற்றி ராகவா லாரன்ஸ் கூறியதாவது..

இரண்டு பள்ளிகளோடு நின்று விடப் போவதில்லை.என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பள்ளிகளைச் சீரமைக்க முடிவு செய்திருக்கிறேன்.

என்னால் தான் படிக்க முடியவில்லை. படிக்கிற குழந்தைகளாவது நிம்மதியாகப் படிக்கட்டுமே என்றார் லாரன்ஸ்.

Related Posts