சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி ஜெயம்ரவிக்கு உருக்கமாகக் கோரிக்கை விடுத்த உதயா

நடிகர் உதயா தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம் உத்தரவு மகாராஜா. ஆசிப் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார்.

இந்தப்படத்தில் நடிகர் பிரபு முக்கியவேடத்தில் நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான நிவின்பாலியின் காயங்குளம்கொச்சுண்ணி உட்பட சில படங்களில் நடித்திருக்கும் அவருக்கு தமிழில் முதல்படம்.

இப்படம் நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்ப் அக்டோபர் 29 அன்று சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய நடிகர் உதயா, பல போராட்டங்களுக்குப் பிறகு இந்தப்படம் நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதல்படியே இப்படம் நவம்பர் 16 அன்று வெளியிடப்படவிருக்கிறது.

அந்தத்தேதியில் சிறு மற்றும் நடுத்தரப் படங்கள் வெளியாகட்டும் என்று சொல்லி, உத்தரவு மகாராஜா, காற்றின் மொழி, செய், ஆர்கேநகர் ஆகிய படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்நிலையில் திடீரென அதே தேதியில் விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி படமும் ஜெயம்ரவி நடித்த அடங்கமறு படமும் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படங்கள் வந்தால் எங்கள் படத்துக்குத் திரையரங்குகள் கிடைப்பது சிரமமாகிவிடும்.

நாங்கள் ஏற்கெனவே அக்டோபர் 5 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டோம். அப்போது 96, நோட்டா ஆகிய படங்கள் வெளியாகின. அவர்கள் ஏற்கெனவே விளம்பரம் செய்துவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

இப்போது நாங்கள் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே விஜய்சேதுபதி மற்றும் ஜெயம்ரவி ஆகியோரிடம் நான் மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து அந்தத் தேதியில் உங்கள் படங்களை வெளியிடத் திட்டமிடாதீர்கள்.

நான், என் படத்துக்காக மட்டும் பேசவில்லை, எல்லாப் படங்களுக்காகவும் பேசுகிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

உதயா மிக வெளிப்படையாக விஜய்சேதுபதிக்கும் ஜெயம்ரவிக்கும் கோரிக்கை வைத்தது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Related Posts