செய்திக் குறிப்புகள்

இஸ்லாமியர் பற்றிய பார்வையை மாற்றிய படம் – இயக்குநர் மகிழ்ச்சி

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா,மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது……,

உதவி இயக்குநராக இருந்தபோதிருந்தே மீரா கதிரவனை எனக்கு தெரியும்.தனிப்பட்டமுறையில் இப்படியான வெற்றிக்குதான் இத்தனை வருடங்களாக அவர் கடுமையாக உழைத்தார்.இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி.குறிப்பாக,கஸ்தூரிராஜா அவர்களை நடிகராக பார்ப்பது மகிழ்ச்சி.இனி வரும் வெற்றிப்படங்களில் எல்லாம் கஸ்தூரிராஜாதான் அப்பாவாக தப்பாமல் இருப்பார்.இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வரவில்லை எனும் சொல்லுமளவுக்கு இஸ்லாமியர்கள் வாழ்வியலை இந்தப்படத்தில் மீரா கதிரவன் பேசியிருக்கிறார்.தமிழ்சினிமாவில் எண்பதுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களை ஏன் தீவிரவாதிகளாக காட்டுகிறார்கள் என்ற விவாதம் நடந்தது.அப்பொழுது தமிழ்சினிமாவில் முக்கியமான இயக்குநர்கள் அனைவரும்,இஸ்லாமியர்கள் வாழ்வை நெருக்கமாக தெரிந்தவர்கள்தான் அவர்கள் குறித்த உண்மையான படம் எடுக்கமுடியும்.அதனால்,மீராகதிரவனை படம் எடுக்கச் சொன்னார்கள்.அப்போது அவர் சம்மதம் தெரிவித்து மனதில் தாங்கிய கதையே ‘ஹபீபி!’ ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இது படமாக வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது நிறைவாக உள்ளது என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா……

எந்த ஒரு கருத்தையும் வலியுறுத்தாமல் நேரில் பார்த்து, அனுபவித்த வாழ்கையை திரைப்படமாக்கி இருக்கிறார் மீரா கதிரவன்.இந்தப்படம் எல்லோருக்கும் தேவை என்பதை உணர்ந்தே அண்ணன் திரைக்கதை எழுதி இருக்கிறார்.வன்முறையை கொண்டாடக்கூடிய, அதை நம் இயல்பாக கூடிய,பேரின்பம் அடையும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.இதற்கிடையில் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்தும் படமாக ‘ஹபீபி’ வந்திருக்கிறது.வசூலிலும் இந்தபடம் பெரிய அளவில் வெற்றிபெறும்போதுதான் அடுத்தடுத்து இதுபோன்ற படங்கள் நிறையவரும்.நிச்சயம் பார்க்காதவர்கள் திரையரங்குகளில் சென்று பாருங்கள் என்றார்.

படத்தொகுப்பாளர் மதி……

என்னுடைய இரண்டாவதுபடமே வரலாற்று சிறப்புமிக்க படமாக அமைந்ததில் மகிழ்ச்சி.எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

கலை இயக்குநர் அப்புன்னி சாஜன்….

இந்தபடம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

நடிகை அனுஸ்ரேயா ராஜன்….

இந்தபடத்திற்கு இரசிகர்கள் கொடுத்துவரும் ஆதரவு நிறைவாக உள்ளது.அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை மாளவிகா மனோஜ்…..

என்னுடைய முதல்படம் இது.இத்தனை வருடங்களுக்கு பின்பு வெளியாகி,இத்தனை பேரின் அன்பை சம்பாதித்திருப்பது நிறைவாக உள்ளது.நன்றி என்றார்.

நடிகர் ஈசா…..

இந்தப்படம் வெளியான பிறகு பலரும் என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார்கள்.தங்கள் வீட்டு பிள்ளைபோல அன்பு காட்டுகிறார்கள்.வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி.படத்தை இரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கும்,படத்தில் என்னுடன் நடித்த நடிகர்களுக்கும் நன்றி என்றார்.

சவுண்டு மிக்ஸிங் உதயகுமார்…..

இந்தப்படத்தின் சவுண்ட்மிக்ஸிங் கிரெடிட் அனைத்தும் இயக்குநரையே சேரும்.ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு ஒலி வேண்டும் என்பதை அவரே முடிவுசெய்தார். இதற்கு சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் பலமாக இருந்தது நன்றி என்றார்.

நடிகை ஜெயஸ்ரீ…..

இந்தப்படத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.வாய்ப்புக்கு நன்றி என்றார்.

நடிகை மலர்…..,

இந்த கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்த இயக்குநர் மீராகதிரவனுக்கு நன்றி.நான் ஒரு யூடியூபர். படத்தில் என்னை பார்த்து அடையாளம் கண்டுவிட்டு பலரும் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.நீங்களும் படத்தை இன்னும் நிறைய பேருக்கு கொண்டு போய் சேர்க்கவேண்டும்.நன்றி என்றார்.

நடிகர் கெளஷிக்…..

இது என்னுடைய முதல்படம். வாய்ப்பு கொடுத்த மீரா கதிரவன் அவர்களுக்கும் ஒத்துழைப்பு தந்த படக்குழுவினருக்கும் நன்றி என்றார்.

நடிகர் சன் சாகுல்….

ஊடகத்துறையும் சினிமாவும் எனக்கு குடும்பம் போல! இது என் மண் சார்ந்த கதை என்பதால்தான் இந்த படத்திற்கு உள்ளே வந்தேன்.மண் சார்ந்த படம் என்பதை தாண்டி இஸ்லாமிய வாழ்வியலை சொல்லக்கூடிய படம் இது எனலாம்.உறவுமுறை,சுகம், துக்கம் என அனைத்தையும் இந்தபடம் பேசி இருப்பதால் உலகமே இதை கொண்டாடுகிறது.வாய்ப்புக்கு நன்றி என்றார்.

சித்தமருத்துவர் சிவராமன்….

இயக்குநர் ராம்தான் இந்தபடத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்.படம் பார்த்துவிட்டு குடும்பத்தோடு வந்தபோது மனம் கனத்துவிட்டது.எனக்கு திருநெல்வேலி சொந்த ஊர்.கடையநல்லூர் வாழ்க்கை முறையை பற்றி தெரியும்.அத்தனை இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு உண்டு.ஆனால்,இப்போது வரும் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை இப்படி காட்டுகிறார்கள் என்ற வருத்தத்திற்கு இந்தப்படம் விடுதலை கொடுத்துள்ளது. இதுபோன்ற படங்கள் பெரும் வெற்றிபெற வேண்டும் என்றார்.

இயக்குநர் தமிழ்….

முழுநீள இஸ்லாமியர் படம் தமிழ்சினிமாவில் வருவதற்கு 100 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.எந்தவொரு புனைவும் இல்லாமல் உண்மையான வாழ்க்கை முறையை திரையில் காட்டியதற்கு தைரியம் வேண்டும்.நடிகர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.படம் பெரும் வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் ராஜூமுருகன்…..

மீரா எனக்கு பலவருட நண்பர்.தமிழில் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் முக்கியமானவை.நல்லசினிமாவுக்கும் வியாபாரத்திற்கும் இடையில் அவர் போராடிக் கொண்டே இருக்கிறார். அவருக்கு முழுமையான வெற்றியை ஹபீபி தேடி தந்திருக்கிறது.தமிழ் இலக்கியத்தில் இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய வரலாறு உண்டு.சீறாப்புராணத்தில் தொடங்கி தோப்பில் முகமது மீரான் வரை பெரிய வரலாறு உண்டு. தமிழக அரசியல் வரலாற்றிலும் இஸ்லாமியர்கள் பங்கு உண்டு.ஆனால் தமிழ்சினிமாவில் மட்டும் அது நடக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் உண்டு.மனிதர்களாக அவர்களை காட்டுவதும்,அவர்களது வாழ்க்கைமுறை உணர்வுகளை அப்படியே திரையில் பிரதிபலிப்பதும் தான் என்னை பொறுத்தவரை உண்மையான தலித்சினிமா, இஸ்லாமியசினிமா.தமிழ்சினிமாவின் தொடக்கமாக ‘மெட்ராஸ்’ படத்தை பார்க்கிறேன்.அதுபோலதான் இஸ்லாமிய சினிமாவின் தொடக்கமாக இந்த ‘ஹபீபி’ உள்ளது.இவ்வளவு இரைச்சல்களுக்கு மத்தியில் இந்த படம் வெற்றி பெற்றிருப்பதை மிகப்பெரிய நம்பிக்கையாக பார்க்கிறேன்.நூறு வருடங்களுக்குப் பிறகு இந்தபடம் மிகப்பெரிய திறப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதிலிருந்து நிறைய சமூக சினிமாக்கள் வரட்டும்.இந்தபடத்தில் கஸ்தூரிராஜா சார் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.இதுபோல நிறைய படைப்புகள் மீரா தர வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…..

கஸ்தூரிராஜா சாரை இயக்குநராக எனக்கு தெரியும். அவரை இந்தபடத்தில் நடிகராக பார்த்து பிரம்மித்து விட்டேன்.நல்லபடங்களை நிச்சயம் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.சினிமா மீது மக்களுக்கு பெரும் நம்பிக்கை உண்டு.அதை புரிந்துகொண்டு சமூகபொறுப்போடு படம் எடுப்பது நமது கடமை.இதை இஸ்லாமிய படமாக பார்க்கத் தேவையில்லை.தமிழ்சமூகத்தில் இன்னொரு மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரு இனத்துடைய படம்தான் இது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததில் சினிமாவிற்கு பெரும்பங்கு உண்டு.அந்த வருத்தத்தை போக்க இந்தபடத்தை பெரும் வெற்றிபெற செய்யவேண்டும் என்றார்.

நடிகை தனஸ்ரீ…

படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர்,நடிகர் கஸ்தூரிராஜா……

இந்தப்படத்தில் என்னை சுதந்திரமாக நடிக்க அனுமதித்த என் மனைவிக்கு முதல் நன்றி.என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களின் ஒத்துழைப்பிற்கும் நன்றி.படம் வெளியானதும் என் மகன்கள்,மகள்கள்,பேரன் பேத்திகள் என அனைவரோடும் பார்த்தேன்.என் மகள் விமலகீதா அழுதுவிட்டார்.தனுஷ் படம் பார்த்துவிட்டு எனக்கு கௌரவமான ஒரு படத்தில் நடித்துள்ளீர்கள் என்றார். இந்தப்பெயரை வாங்கித்தந்த மீராகதிரவனுக்கு நன்றி. இந்தபடமும் யூசுப் கதாபாத்திரமும் எனக்கு இன்னொரு பிறவி.இஸ்லாமியராக நான் நிஜத்திலும் மாறிவிட்டேனோ என எனக்கு தோன்றும்.இயக்குநராக கஸ்தூரிராஜா என்ற பெயரும் நடிகருக்கு யூசுப் என்ற பெயரும் வைக்கலாமோ எனவும் அடிக்கடி தோன்றும்.மீராகதிரவனுக்குப் பின்னால் இந்தபடம் உருவாவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.பல விருதுகள் இந்தப்படம் வாங்கி குவிக்கும் என்றார்.

தயாரிப்பாளர் கருப்பசாமி…..

‘பறந்து போ’படம் வெற்றி பெற்றது.அதற்கடுத்து ‘ஹபீபி’யும் எங்களுக்கு வெற்றிபடமாக அமைந்துள்ளது. இதற்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் இப்ராஹிம்…..

மக்களிடத்தில் இந்தபடத்தை கொண்டுபோய் சேர்த்து வெற்றிபடமாக மாற்றிய அனைத்து ஊடகங்களுக்கும் இரசிகர்களுக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் மீரா கதிரவன்…..

110 வருட தமிழ்சினிமாவில் இது என்னுடைய முதல்படமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். பிரசாத்லேப் மேடை எனக்கு பழசு.ஆனால்,இந்த உணர்வு புதிதாக உள்ளது.ஏனெனில்,இது என் முதல் நன்றி தெரிவிக்கும் விழா.கஸ்தூரி ராஜா போன்ற பெரியவர்கள் என்னை குரு என்று சொல்வது எனக்கு கூச்சமாக உள்ளது.இது எனக்கு முதல்முறை.என்னை சினிமாவிற்கு அனுமதித்த என் குடும்பத்திற்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்குமே நன்றி.நெருக்கடியான தருணத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்திற்கு பணம் தந்து உதவினார்.இயக்குநர் ராம் இந்தபடத்தை தோளில் தூக்கி சுமந்தபிறகு தான் இதற்கு வெளிச்சம் கிடைத்தது.நண்பர் என்பதால் ராம் இதனை எனக்கு செய்யவில்லை.எல்லா நல்லபடங்களுக்கும் அவர் செய்வார்.இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததில் சினிமாவுக்கு மிகப்பெரும் பங்கு உண்டு.அதை மாற்றவேண்டும் என்றால் நாம்தான் முன்வரவேண்டும்.இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்தபடம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன் அனைவருக்கும் நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts