த்ரிஷாவா? ஐஸ்வர்யா ராஜேஷா? போட்டி ஆரம்பம்
இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் செக்கச் சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ்த் திரையுலகில் நடிப்புத் திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின் திறமையை உணர்ந்த இயக்குநர் ஹரி சாமி படத்தின் முதல் பாகத்தில் திரிஷா நடித்த கேரக்டரில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்.
இயக்குநர் ஹரி, இவருக்கும் விக்ரமிற்கும் இடையேயான காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தற்போது பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் முகாமிட்டு படமாக்கி வருகின்றார்.
இந்த படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபு, பாபி சிம்ஹா,சூரி, இமான் அண்ணாச்சி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தை தமீன் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்து வருகிறார்.
சாமி படத்தின் முதல்பாகம் த்ரிஷாவுக்குப் பெரும் வரவேற்பு கொடுத்த படம். இப்போது அந்த வேடத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் வெளியான பின்பு த்ரிஷாவைவிட இவர் நன்றாக நடித்திருக்கிறார் என்று வரப்போகிறதா? த்ரிஷாவே பரவாயில்லை என்று சொல்லப்போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.











