கர்ணன் முதல்நாள் வசூல் – மகிழ்ச்சியில் திரையுலகம்
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்,லால், ரெஜிஷாவிஜயன், லட்சுமிபிரியா, ஜி.எம்.குமார் , யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன்.
நேற்று (ஏப்ரல் 9) இப்படம் வெளியானது. இப்படத்துக்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழகமெங்கும் சுமார் ஐநூறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது.
கொரோனா பீதி அதிகரித்திருக்கும் நிலையில் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா? என்கிற கேள்வியைப் பொய்யாக்கி தமிழகமெங்கும் நேற்று நல்ல கூட்டம் வந்திருக்கிறது. தமிழகத் திரையரங்குகளில் முதல்நாள் வசூல் சுமார் பத்துகோடி என்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகிய எல்லா ஊர்களிலும் வசூல் நன்றாக இருந்ததென்கிறார்கள்.
இன்றுமுதல் ஐம்பது விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்கிற அரசாங்கத்தின் அறிவிப்பு திரையரங்கினரைக் கலக்கமடையச் செய்தாலும், அந்த ஐம்பது விழுக்காடும் நிறைந்துவிடும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
போனவாரம் வெளியான கார்த்தி நடித்த சுல்தான் படமும் நன்றாக வசூலித்து இரண்டாவது வாரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் வெளியாகி நல்ல வசூல் பெற்றிருக்கிறது கர்ணன்.
இதனால், கொரோனா பீதியால் இனி திரையுலகம் இருக்குமா? திரையரங்குகள் நீடிக்குமா? என்று பயந்து கொண்டிருந்த பல்லாயிரம் பேருக்கு நம்பிக்கை ஒளி பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணம் மற்றும் தின்பண்டங்களின் விலைகள் சரியானதாக இருந்தால் இன்னும் கூட்டம் வரும் என்கிறார்கள்.











