சினிமா செய்திகள்

இரண்டாவது வாரத்திலும் இவ்வளவு திரையரங்குகளா? – திரையுலகுக்கு தைரியம் கொடுத்த சுல்தான்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா, லால், பொன்வண்ணன் உட்பட பலர் நடித்த படம் சுல்தான். ஏப்ரல் 2 ஆம் தேதி இப்படம் வெளியானது.

தமிழகம் உச்சகட்டத் தேர்தல் பரபரப்பில் இருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. முதல்நாளே பல எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

எல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துவருகிறதென திரையரங்கினர் சொல்லிக்கொண்டிருந்தனர். தேர்தல் நாளைத்தாண்டியும் தொடர்ந்த அந்நிலை இப்போது இரண்டாவது வாரத்திலும் தொடர்வதாகச் சொல்கின்றனர்.

நேற்று தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வெளியானது.சுல்தான் படத்தை எடுத்துவிட்டு கர்ணன் திரைப்படத்தைத் திரையிட்டார்களா? என்று கேட்டால் இல்லை என்கிறார்கள்.

முதல்வாரம் தமிழகமெங்கும் 500 திரையரங்குகளில் சுல்தான் வெளியானதென்றும் நேற்று கர்ணன் வெளியான பிறகும் 350 திரையரங்குகளில் சுல்தான் தொடர்கிறது என்று சொல்கிறார்கள்.

இரண்டாவது வாரத்தில் 350 திரையரங்குகளில் தொடர்வது மட்டுமின்றி வசூலும் திருப்திகரமாக இருப்பதாகச் சொல்கின்றனர்.

கொரோனா பீதியை அரசாங்கங்களே அதிகரித்துக் கொண்டிருந்தாலும் திரையரங்கில் வந்து படம் பார்க்கும் பழக்கம் குறையவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது. நம்பிக்கையற்றிருந்த திரையுலகினருக்கு இதன்மூலம் பெரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணமான சுல்தான் படக்குழுவினருக்குப் பலரும் நன்றி சொல்லிவருகின்றனர்.

நுழைவுச்சீட்டு மற்றும் தின்பண்டங்களின் கட்டணங்களைக் குறைத்தால் திரையரங்குகளுக்கு வருவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts