விமர்சனம்

கர்ணன் – திரைப்பட விமர்சனம்

பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன்.

1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை.

சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம் முறையிட்டாயிற்று, மனு கொடுத்தாயிற்று ஆனாலும் பேருந்து நிற்கமாட்டேனென்கிறது. 
நில்லாமல் போன பேருந்துகளை நிற்க வைக்க அவர்கள் கையாண்ட வழிமுறை என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதைக் கதைக்களமாக வைத்துக் கொண்டு பல்லாயிரமாண்டு வலிகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

படத்தின் தொடக்கத்தில் துடிப்பும் துள்ளலுமாய் மீன்வெட்டி, ஊர்வாளைக் கையிலேந்தும் தனுஷ் படம் முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறார்.

நாயகி ரெஜிஷாவுடன் காதல் வந்ததும் குழையும் காட்சிகள் அழகு.நாயகி பேச மறுத்ததும் மதுக்குடித்துவிட்டு வெறி கொண்டு ஆடுவதும் அதன்பின் அக்கா ஆக்ரோசமாகும் நேரத்தில் குற்றவுணர்ச்சியில் தவிப்பதையும் சரியாக வெளிப்படுத்துகிறார் தனுஷ்.

இந்தப்படத்தின் இன்னொரு நாயகன் லால். தனுஷுக்கு இணையான துடிப்பும் தனுஷை மிஞ்சும் நடிப்பும் சிறப்பு.தனுஷ் ரெஜிஷா இணையை விட தனுஷ் லால் இணை முந்தி நிற்கிறது.

நாய்கி ரெஜிஷா அழகான புதுவரவு. பாத்துகிட்டிருக்கேன்ல என்று அலட்சியமாய்ச் சொல்லி அண்ணன் யோகிபாபுவின் மிரட்டலை எதிர்கொள்வதும், பேருந்திலிருந்து தனுஷ் கீழே விழுந்ததும் அலறுவதும் அதன்பின் தேடிவந்து  தனுஷுக்கு முத்தம் கொடுப்பது என எல்லாவற்றிலும் பாத்திரத்துக்கு வலுச்சேர்த்து ஆணாதிக்கத்தை உடைத்தெறிகிறார்.

ஊர்த்தலைவர் ஜி.எம்.,குமார் தன் தேர்ந்த நடிப்பால் சில இடங்களில் ஆனந்தத்திலும் பல இடங்களில் ஆற்றாத்துயரத்திலும் கண்கலங்க வைத்திருக்கிறார்.  

தனுஷின் அக்காவாக நடித்திருக்கும் லட்சுமிபிரியாவும் இன்னொரு நாயகிதான். தன் சுகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு குடும்பத்தின் மேன்மைக்காக உழைக்கும் அழகி. தம்பிக்குத் துன்பம் வரும் நேரங்களில் கலங்கித் தவித்து நம்மையும் தவிக்க வைத்திருக்கிறார்.

யோகிபாபுவுக்கு மாறுபட்ட வேடம். அதற்கேற்ப நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சண்முகராஜனுக்கு நல்ல வேடம் அமைந்திருக்கிறது. கிடைத்ததை விடாமல் பிடித்து கவனிக்க வைத்திருக்கிறார். 

காவல்துறையினரின் அதிகார மமதைக்குள் சாதி ஆணவமும் புகுந்துகொண்டால் என்னவாகும்? என்பதை நல்லவர் போலவே வருகிற காவல் அதிகாரி நட்டி அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

பூ இராம், மதன், கெளரிகிஷன் ஆகியோரும் சிறப்பு.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அற்புதம். திரைக்கதையின் அழகுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார்.

சந்தோஷ்நாராயணின் இசையில் கண்டா வரச்சொல்லுங்க மிரட்டுகிறது. மஞ்சணத்தி உருக வைக்கிறது.பின்னணி இசை அதிர வைக்கிறது.

ஆதிக்குடிகளின் பழக்க வழக்கங்களை வைத்துக் கொண்டே தனுஷின் நாயக பிம்பத்துக்குப் பங்கம் வராமல்  திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் மாரிசெல்வராஜ். யானை மீதும் குதிரை மீதும் நீண்ட போர்வாளோடு பவனி வர வைத்திருக்கிறார்.

படம் நெடுக சிறுதெய்வங்களை உலவ விட்டு எல்லாவற்றிற்கும் அவர்களைச் சாட்சியாக வைத்திருப்பது அட்டகாசம்.

நீண்ட நெடிய சாதிய ஒடுக்குமுறைகள், அவற்றை அரசு எந்திரங்கள் கையாளும் முறைகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தியதன்  மூலமும் கதாபாத்திரங்களுக்கு சூட்டியிருக்கும் பெயர்களாலும் பல விவாதங்களுக்கு வழி சமைத்திருக்கும் இயக்குநர், தனுஷ், கலைப்புலி தாணு ஆகியோரை முன்னிறுத்தி நாங்கள் நிமிர்ந்துவிட்டோம் இனி குனிய முடியாது என்று இப்படம் மூலம் உலகுக்கு அறிவித்திருக்கிறார். 

Related Posts