சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் சிம்பு – விரைவில் அறிவிப்பு

சிம்பு இப்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு ஞானவேல்ராஜா தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கும் பத்துதல படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.

ஒருவேளை அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனால், கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய படமான நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

கவுதம்மேனன் சிம்பு இணையும் இந்தப்புதிய படத்தை ஐசரிகணேஷ் தயாரிக்கிறார்.

அவர் தயாரிப்பில் இந்தப்படம் மட்டுமின்றி இன்னொரு படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை முடித்த பிறகு அந்தப்படம் தொடங்குமாம். ஏனெனில் ஐசரிகணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் இன்னொரு படத்தையும் இயக்கவிருப்பது கவுதம் மேனன் தான் என்கிறார்கள்.

ஐசரிகணேஷ் தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்களில் சிம்பு நடிக்கிறார் அவை இரண்டையும் கவுதம் மேனன் இயக்குகிறார் என்பதைவிட முக்கியச் செய்தி ஒன்றிருக்கிறது.

அது, அந்தப்படத்தின் பெயர். அந்தப்படத்துக்கு சூப்பர்ஸ்டார் என்று பெயர் வைக்க முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்பெயரில்தான் அந்தக்கதை எழுதப்பட்டிருக்கிறது என்றும் அதையே படத்துக்கும் வைத்துவிடலாம் என்று முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆக, சூப்பர்ஸ்டார் ஆகிறார் சிம்பு.

Related Posts