வேண்டுகோள் விடுத்த விஜய்சேதுபதி ஏற்றுக்கொண்ட லலித்குமார்
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘லாபம்’. இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை 7சி எண்டர்டையின்மெண்ட் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.
‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போது எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நிலை மோசமடைந்தது. அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
எஸ்.பி.ஜனநாதன் மறைவைத் தொடர்ந்து ‘லாபம்’ படத்தின் நிலை என்ன? எப்போது வெளியீடு? உள்ளிட்ட விசயங்கள் தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘லாபம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 7சி எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் நேற்று (மார்ச் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும் ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.
இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சி இருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியிடவுள்ளோம். அனைத்துப் பணிகளையும் முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘லாபம்’ திரைப்படம் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நிச்சயமாக மணிமகுடமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை”.
இவ்வாறு 7சி எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏப்ரலில் வெளீயீடு என்று சொல்லியிருந்தாலும் தேதி சொல்லவில்லை.விசாரித்தால், ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
இந்தத் தேதியில், விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படம் வெளியாவதாக இருந்தது. விஜய்சேதுபதியே நேரடியாக துக்ளக் தர்பார் படத்தயாரிப்பாளர் லலித்குமாரிடம் பேசி, இந்தத் தேதியில் லாபம் வெளியாக வ்ழிவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம். அவரும் அதை ஏற்றுக் கொண்டதால் லாபம் வெளீயீடு பற்றிய அறிக்கை வெளீயானது என்கிறார்கள்.











