Uncategorized செய்திக் குறிப்புகள்

கான்சிட்டி வெற்றிக் கொண்டாட்டம் ஏன்? – தயாரிப்பாளர் வெளிப்படை

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு,கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துக்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரசியமான சம்பவங்களை நகைச்சுவை,பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து சொல்லியிருந்த கான் சிட்டி திரைப்படம்,அனைத்துத்தரப்பு இரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அர்ஜூன் தாஸ் நடிப்பில்,அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில்,பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில்,படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா ஜூலை 20 அன்று நடைபெற்றது.

இந்தநிகழ்வில்,படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த இரசிகர்கள்,திரையரங்க உரிமையாளர்கள்,விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில் நடனஇயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசியதாவது….

முதலில் ஹரிஷ் ப்ரோவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.இந்தப்படம் தொடங்கிய நாள் முதல் அவருடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.இன்று இந்தப்படத்தின் வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஹரிஷ் ப்ரோவுக்கு மிகப்பெரிய விஷன் இருக்கிறது.இது அவருடைய தொடக்கம் மட்டுமே.அவர் நினைத்த உயரத்தை நிச்சயமாக அடைவார் என்ற முழுநம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆரம்பத்தில் அவர் என்ன சொன்னாரோ?அதே இலக்கில் இன்றுவரை முழுகவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார்.அதனால்தான் இன்று இந்த வெற்றிவிழாவைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அர்ஜுன் ப்ரோவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.மிகவும் பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியிலும்,கிடைத்த சிறிய இடைவெளிகளில்கூட நடனஒத்திகையில் முழுஈடுபாட்டுடன் கலந்துகொண்டு எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்.அதற்காக அவருக்கு பெரிய நன்றி.
வடிவுக்கரசி அம்மாவுக்கும் நன்றி.இந்தவயதிலும் அசராத உற்சாகத்துடன்,எந்தக்காட்சிக்கும் உடனடியாக தயாராகி நடித்தது எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.அவருடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் ஒரு முன்மாதிரி.
ஆர்.சி.ப்ரோவுக்கும் மனமார்ந்த நன்றி.படத்தின் ஒவ்வொரு பணியிலும் மிகுந்த ஒத்துழைப்புடன் இருந்து,அனைத்து விசயங்களையும் விரைவாகச் செய்து கொடுத்தார்.
எடிட்டர் அருள் ப்ரோவுக்கும் சிறப்பு நன்றி.பாடல்கள் உள்ளிட்ட பல வேலைகளில் எவ்வளவு முறை மாற்றங்கள் செய்தாலும் சலிக்காமல் முழு ஒத்துழைப்புடன் இருந்தார்.நாங்கள் ஒரு வருடம் உழைத்தோம்;அதன்பிறகு ஹரிஷ் ப்ரோவும் தொடர்ந்து ஒருவருடம் இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்தார்.இந்தப்படம் எங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கியுள்ளது.
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்,நடிகர், நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

படத்தொகுப்பாளர் அருள் மோசஸ் பேசியதாவது….

கான் சிட்டி திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பையும்,மக்களிடையே மிகப்பெரிய ரீச்சையும் கிடைக்கச் செய்தது இரசிகர்களும்,பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்களும்தான்.அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக,இந்தப்படம் வேர்ட் ஆஃப் மவுத் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.அந்த வெற்றிக்கான மிகமுக்கியமான காரணம் இரசிகர்கள்தான்.படத்தைப் பார்த்து நல்லகருத்துகளைப் பகிர்ந்து,மற்றவர்களும் பார்க்கவேண்டும் என்று பரிந்துரைத்த ஒவ்வொரு பார்வையாளருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி.
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.அதேபோல்,என்னுடைய உதவியாளர்கள் மற்றும் உதவிஇயக்குநர்கள் அனைவரும் அளவுகடந்த உழைப்பை இந்தப்படத்திற்காக வழங்கினர்.குறிப்பாக,இறுதிக்கட்டப் பணிகளில் சிறந்த வெளியீட்டை உருவாக்கும் நேரத்தில் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக,இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும்,இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வெற்றிப் பயணத்தின் ஒருபகுதியாக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

விநியோகஸ்தர் ஐயப்பன் பேசியதாவது….

படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது.அதற்காக இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் பாராட்டுகள்.
அர்ஜுன்தாஸிடம் ஒரு வேண்டுகோள்.இதுபோன்ற நல்லகதைகளோடு சேர்த்து,இனிமேலும் குடும்ப இரசிகர்கள் அனைவரும் இரசிக்கும் வகையில் அதிகமான குடும்பப்படங்களிலும் நீங்கள் நடிக்கவேண்டும்.அப்படிப்பட்ட படங்களுக்கு இரசிகர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் கல்கி ராஜா பேசியதாவது….

அனைவருக்கும் வணக்கம்.முதலில்,இந்தப்படத்தில் எனக்கு சிறப்பான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தவாய்ப்புக்காக அவருக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்லவேண்டும்.
அதேபோல்,தயாரிப்பாளர் அஜந்தா சார் அவர்களுக்கும் என் நன்றிகள்.ஏற்கனவே அவருடைய “கைதி” திரைப்படத்தில் பணியாற்றியிருந்தேன்.தற்போது “கான் சிட்டி” போன்ற வெற்றிப்படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
மேலும்,வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து நடித்தது எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.அவருடன் திரையைப் பகிர்ந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது.
அதேபோல்,எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் பரத் சார்,படப்பிடிப்பு முழுவதும் எங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதலையும் வழங்கி உறுதுணையாக இருந்தார்.அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் ரகு பேசியதாவது….

கான் சிட்டி திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் உற்சாகமாகவும்,மகிழ்ச்சியாகவும் சென்றது.
அர்ஜுன்தாஸ் ப்ரோ,வடிவுக்கரசி அம்மா,யோகிபாபு அண்ணா உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் ஜாலியான அனுபவமாக இருந்தது.அதேபோல் அகிலனுடனும் பணியாற்றியது மறக்கமுடியாதது.அவர் ஒருமுறை,நீங்கள் என் கனவில் வந்து என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்கள் என்று நகைச்சுவையாகச் சொன்னார்.அந்த சம்பவம் இன்னும் நினைவில் இருக்கிறது.
இந்தப்படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.குறிப்பாக எடிட்டர் அருள்மோசஸ்,இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்,ஒளிப்பதிவாளர்,மோகன்ராஜா உள்ளிட்ட அனைவரும் மிகச்சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.
இந்தப்படத்தின் எடிட்டிங் என்பது மிகவும் சவாலான வேலை.இயக்குநர் ஹரிஷ் ப்ரோ படத்திற்காக ஏராளமான காட்சிகளைப் படமாக்கியிருந்தார்.திரையில் நாம் பார்க்கும் படம் இரண்டுமணி நேரம் மட்டுமே என்றாலும்,அதற்காக ஆறுமணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகளை அவர் பதிவு செய்திருந்தார்.அவற்றை ஒருங்கிணைத்து சிறந்த வடிவத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான பணி.மேலும்,ஒரேநாளில் இவ்வளவு காட்சிகளைப் படமாக்கிய இயக்குநரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே ஆச்சரியப்பட வைத்தது.
இந்தப்படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.ஒருநாள் மட்டுமே நடித்த சில கதாபாத்திரங்கள்கூட படம் முழுவதும் மனதில் நிற்கும் வகையில் அமைந்திருந்தது.அதுவே இந்தக்குழுவின் மிகப்பெரிய பலம். இவ்வளவு அருமையான குழுவுடன் பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன்.கான் சிட்டி படத்தின் இந்த வெற்றி,படக்குழுவின் அடுத்தடுத்த படைப்புகளிலும் தொடர்ந்து அமையவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.நன்றி என்றார்.

நடிகர் ஆதித்யாகதிர் பேசியதாவது….

முதலில் இயக்குநர் ஹரிஷ் ப்ரோவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பெரியவெற்றியை அடைவதற்கு அவர் கடந்துவந்த பயணம் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.அந்த உழைப்புக்கான பலனாக இன்று இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.அதற்காக அவருக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.
அடுத்ததாக,அர்ஜுன்தாஸ் ப்ரோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.வில்லனாக அறிமுகமான நீங்கள்,இன்று கதாநாயகனாக அடுத்தகட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்.இன்னும் மிகப்பெரிய உயரங்களை அடைவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்குக் காரணம் உங்கள் நல்லமனசு.ஒரு போஸ்டரில் படத்தில் நடித்த அனைவருக்கும் இடம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் ஹீரோக்கள் மிகவும் அரிது.அர்ஜுன்தாஸ்,அன்னாபென்,யோகிபாபு என அனைவரின் பெயர்களும் முக்கியத்துவம் பெறவேண்டும் என்று நினைக்கும் உங்கள் பண்பு மிகவும் பாராட்டத்தக்கது.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வில்லனாகத் தொடங்கி உச்சத்தை அடைந்தது போல,நீங்களும் மிகப்பெரிய உயரத்தை அடையவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இறுதியாக,இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து,அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.இதேபோல் தொடர்ந்து நல்லபடங்களுக்கு உங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசியதாவது….

கான் சிட்டி திரைப்படம் 25 ஆவது நாளை எட்டி,வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப்படத்தின் வெற்றிக்குக் காரணம் இதில் பணியாற்றிய ஒவ்வொருவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான்.நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் திறமையையும் வெளிக்கொண்டு வந்து,ஒவ்வொருவருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களை வழங்கி, சிறந்த படைப்பாக உருவாக்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கே முதலில் நன்றியைச் சொல்லவேண்டும்.
இன்று இந்த 25 ஆவது நாள் வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சியான விசயம்.ஆனால் இது ஆரம்பம் மட்டும்தான்.இனி இதைவிட மிகப்பெரிய வெற்றிகள் இயக்குநர் ஹரிஷ் மற்றும் இந்தப்படக்குழுவினரை தேடி வரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
அதேபோல்,நம்முடைய கதாநாயகர் அர்ஜுன்தாஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.அவருக்கு இனி இன்னும் நிறைய வெற்றிகள் காத்திருக்கின்றன.அவர் தொடர்ந்து உயர்ந்த இடத்தை அடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.மிகப்பெரிய நட்சத்திரமாக அவர் உருவெடுக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.நன்றி என்றார்.

நடிகர் சதா பேசியதாவது…..

இது என்னுடைய முதல் திரைப்படம்.இந்த ஒருபடத்திற்கே எனக்கு கிடைத்த வரவேற்பும்,அங்கீகாரமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.படம் வெளியான பிறகு சென்னை,சேலம்,மதுரை,திருச்சி,திருப்பூர், கோயம்புத்தூர் என பல நகரங்களுக்கு சென்றோம்.ஒவ்வொரு இடத்திலும் ஒரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மிகவும் வித்தியாசமாகவும், மனதை நெகிழச் செய்வதாகவும் இருந்தது.ஒரு அம்மா வந்து என் நெற்றியில் திருநீறு வைத்து,நீ நல்லா இருக்கணும் என்று ஆசீர்வதித்தார்.என் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் எனக்காக அப்படி செய்ததில்லை.அந்த அன்பு என்னை மிகவும் நெகிழ வைத்தது.எங்கு சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு வந்து பேசுகிறார்கள்.ஐந்து நிமிடம்,பத்து நிமிடம் என நின்று தங்களுடைய பாராட்டுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.அந்த அன்பை உணரும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியதை விட,இன்று இந்த வெற்றிவிழாவில் பேசுவது எனக்கு இன்னும் கடினமாக இருக்கிறது.
இந்தப்படத்தின் ஒவ்வொரு துறையுடனும் நான் நெருக்கமாகப் பயணித்தேன்.இது என்னுடைய முதல்படம் என்பதால்,என்னை நம்பி கொடுத்த இந்தவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.அதனால்,எனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில்கூட அனைத்துத் துறைகளுடனும் இணைந்து அவர்களின் பணியைக் கவனித்தேன்.
ஒளிப்பதிவாளருடன் இருந்து காட்சிகள் எப்படி அமைக்கப்படுகின்றன,ஒளி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்தேன். இசையமைப்பாளர் ஷான்ரோல்டனுடன் இசை அமர்வுகளில் கலந்துகொண்டேன்.டப்பிங்,சவுண்ட் இன்ஜினியரிங்,சவுண்ட் மிக்சிங் என ஒவ்வொரு கட்டத்திலும் உடன் இருந்து கற்றுக்கொண்டேன்.திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் அதற்குக் காரணம்.
அதன்பலனாக இருக்கலாம்,ஏற்கனவே எனக்கு அடுத்த இரண்டு,மூன்று படங்களுக்கான வாய்ப்புகள் வந்துள்ளன.அதற்காக மிகவும் மகிழ்ச்சியாகவும்,நன்றியுடனும் இருக்கிறேன் என்றார்.

குழந்தை நட்சத்திரம் நடிகர் அகிலன் பேசியதாவது….

அனைவருக்கும் வணக்கம்.என் பெயர் அகிலன்.கான் சிட்டி திரைப்படத்தில் நடிக்க எனக்கு இந்தவாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதேபோல்,இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர் அங்கிளுக்கும்,என்னுடன் நடித்த அனைத்து நடிகர்,நடிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.எனக்கு இவ்வளவு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசியதாவது….,

முதலில்,இந்தப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது.எந்தப்படமாக இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை.அந்தப் பொறுப்பை மிகச்சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறீர்கள்.அதன் பலனை இன்று நாங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறோம்.
இசையமைப்பாளர் ஷான்ரோல்டனும் நானும் இணைந்தால் அது வெற்றிக்கூட்டணியாக இருக்கும் என்று அனைவரும் சொல்வார்கள். அந்த நம்பிக்கையை மீண்டும் இந்தப்படம் நிரூபித்துள்ளது.அதற்காக அவருக்கும் என் நன்றிகள்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் என் நண்பர்.இந்தப்படம் தொடங்கிய நாள் முதல் இன்று இந்த வெற்றிமேடை வரை அவர் கடந்த பயணம் எனக்கு நன்றாகத் தெரியும்.ஹரிஷ்,நீ ஒரு ஆலமரம் போல வளரப்போகிறாய்.இது உன் முதல் வெற்றிப்படி மட்டுமே.இன்னும் பல உயரங்களை நீ அடைவாய் என்ற முழுநம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தப்படத்தில் இரண்டு தத்துவப் பாடல்களை எழுதும் வாய்ப்பை ஹரிஷ் எனக்கு வழங்கினார்.அதற்காக நான் எப்போதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்.அந்தப்பாடல்கள் தாமதமாக இரசிகர்களிடம் சென்றாலும்,காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

“ஏமாற்றாதே… ஏமாறாதே…” என்ற பாடலும்,“கண்ணா ப்ரோ…” பாடலில் இடம்பெற்ற,
“வெற்றி பெற்ற செடியும் இங்கு விழுந்து வீழும் காலம் உண்டு…
தோற்று தோற்று நின்றவரும் வாழும் காலம் உண்டு…”

என்ற வரிகளும் வாழ்க்கைக்கு நம்பிக்கை தரும் வரிகள்.அவற்றை எழுத வாய்ப்பு அளித்த ஹரிஷுக்கு மீண்டும் என் நன்றிகள்.
அதேநேரத்தில்,இரசிகர்களிடம் ஒரு மன்னிப்பையும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.“ஃப்ராடு பையலே” பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.அது நேரக்குறைவு காரணமாக நீக்கப்பட்ட பாடல் அல்ல.ஆரம்பத்திலேயே அந்தப்பாடல் படத்தில் இடம்பெறாது என்று திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.இருந்தாலும்,சமூகவலைதளங்களில் அந்தப்பாடலுக்காகவே பலர் படத்தைப் பார்க்க வந்ததாகக் கூறிய பதிவுகளைப் பார்த்தபோது,அதை படத்தில் சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்கும் தோன்றியது.அந்தப்பாடலை நேசித்த அனைத்து இரசிகர்களிடமும் படக்குழு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அர்ஜுன்தாஸ் சார் குறித்து ஒரு விசயம் சொல்லவேண்டும்.இந்தப்படத்தின் மூலமாகவும்,பாடல்களின் மூலமாகவும் அவருக்கு ஏராளமான இரசிகர்கள் உருவாகியுள்ளனர்.குறிப்பாக பெண் இரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது.ஆக்ஷன் மட்டுமல்லாமல் காதல்கதைகளிலும் அவர் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை.அவரை ஒரு முழுமையான காதல்நாயகனாக இரசிகர்கள் பார்க்கும் நாள் நிச்சயம் வரும்.அதற்கான பாடல்களை எழுதுவதில் நானும்,ஷான்ரோல்டனும் தொடர்ந்து இருப்போம்.
ஷான்ரோல்டனுடன் பணியாற்றுவது ஒரு வேலை மட்டுமல்ல;அது ஒரு நம்பிக்கை.ஒவ்வொருமுறையும் அந்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் நாங்கள் பணியாற்றுகிறோம்.அவருடைய இசையும்,எங்களுடைய முயற்சியும் சேர்ந்ததுதான் இந்த வெற்றிக்கூட்டணி.அது இன்னும் நீண்டகாலம் தொடரும் என்று நம்புகிறேன்.
சதா,கல்கிராஜா,ஆதித்யாகதிர்,ரகு,அகிலன் உள்ளிட்ட அனைவரும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்கள்.குறிப்பாக அகிலனின் இறுதிக்காட்சி திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று ஹரிஷ் முன்கூட்டியே சொன்னார்.அதேபோலவே அது இரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இமான் அண்ணாச்சி,உங்களுடைய சிறிய சிறிய காட்சிகளும்,வசன உச்சரிப்பும் இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.ஆக்ஷன் சந்தோஷ் மாஸ்டர்,அருள்மோசஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக,Power House Pictures நிறுவனத்திலிருந்து இன்னும் பல தரமான படங்கள் வரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். ஹரிஷின் பார்வை மிகப்பெரியது.அந்தக்கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.நன்றி என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது….

இன்று ஒரு சிறந்தகலைஞன் எந்தப்பகுதியிலிருந்தும் உருவாக முடியும் என்பதை நிரூபிக்கும் நாளாக இருக்கிறது.அந்த வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்கும் சாவியாக இன்று நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்.அதற்காக ஹரிஷின் சார்பிலும்,அவரது சகோதரனாகவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கான் சிட்டி” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.உண்மையைச் சொல்லவேண்டும் என்றால்,இந்தப்படத்திற்கு நான் இன்னும் அதிகமான வரவேற்பை எதிர்பார்த்திருந்தேன்.இந்தப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பணியாற்றினேன்.இருந்தாலும்,ஹரிஷின் முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு அளவில்லா சந்தோசத்தைத் தருகிறது.இது அவருடைய பல வெற்றிகளில் முதல்வெற்றி மட்டுமே.
ஹரிஷ் மிகவும் கூர்மையான சிந்தனை கொண்ட இயக்குநர்.அவருடைய அறிவும்,கதையை அணுகும் விதமும் தனித்துவமானது.ஒரு சிறிய விசயத்தைக்கூட பெரியதாக்கம் ஏற்படுத்தும் வகையில் சொல்லும் திறமை அவருக்கு இருக்கிறது.அவர் முதன்முதலில் கதையைச் சொன்னபோது,இவ்வளவு கதாபாத்திரங்களையும்,இவ்வளவு நிகழ்வுகளையும் இரண்டுமணி நேர திரைப்படமாக எப்படி வடிவமைப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.ஆனால் அதை மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
பொதுவாக அதிக கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் எல்லோரும் இரசிகர்களின் மனதில் நிற்பதில்லை.ஆனால் “கான் சிட்டி” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரம்வரை அனைவருக்கும் நினைவில் நிற்கும் தருணங்கள் இருந்தன. ஒவ்வொரு நடிகருக்கும் திரையரங்கில் கைதட்டல்களும் வரவேற்பும் கிடைத்தது.ஒரு இயக்குநரின் மிகப்பெரிய வெற்றி அதுதான்.இது எதிர்காலத்தில் மிகப்பெரிய படங்களை உருவாக்கப்போகும் இயக்குநரின் அடையாளம்.பான்இந்தியா,பான்வேர்ல்ட் அளவிலான படைப்புகளை ஹரிஷ் நிச்சயமாக உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நான் எப்போதும் ஹரிஷிடம் சொல்வது ஒன்றுதான்.இது அவருடைய பயணத்தின் தொடக்கம் மட்டுமே.இது வெறும் வார்ம்-அப். இன்னும் அவர் செய்யப்போகும் சிறந்த படைப்புகள் மிகப்பெரிய அளவில் இருக்கும்.அந்த வெற்றிகளைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எடிட்டர் அருள்மோசஸைப் பற்றியும் சொல்லவேண்டும்.பின்னணி இசை அமைக்கும் நேரத்தில் ஒவ்வொரு காட்சியின் தொடக்கம், முடிவு,இசைக்கான இடைவெளி என அனைத்தையும் மிகத்துல்லியமாக அமைத்துக் கொடுத்தார்.இசையமைப்பாளர்களின் பணியை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஒத்துழைக்கும் மிகச்சிறந்த,உணர்வுப்பூர்வமான எடிட்டர் அவர்.தொழில்துறையில் அவருக்கு இருக்கும் நல்லபெயருக்கு காரணம் அவருடைய உழைப்புதான்.அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
நடனஇயக்குநர் சந்தோஷ் மாஸ்டருக்கும் என் நன்றிகள்.முதன்முதலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மறக்கமுடியாதது. என்னால் செய்யமுடியும் என்று நான் நினைக்காத விசயங்களைக்கூட என்னிடம் இருந்து சிறப்பாக வெளிக்கொண்டு வந்தவர் அவர். திரையில் நான் ஆடியதைப் பார்த்தபோது,அதை உண்மையிலேயே நான்தானா செய்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதற்கெல்லாம் முழுக்காரணம் சந்தோஷ் மாஸ்டரின் அர்ப்பணிப்பும் திறமையும்தான்.
குறிப்பாக குழந்தைகளுடன் அவர் பணியாற்றிய விதம்,பாடல்களின் நடன அமைப்பு,படத்தின் பல முக்கிய தருணங்களை மேலும் சிறப்பாக்கிய விதம் ஆகியவை இந்தப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப்படத்தில் நடித்த அனைத்து குணச்சித்திர நடிகர்களும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.ஒரு கதையின் வெற்றிக்கு தரமான துணைக்கதாபாத்திரங்கள் மிகவும் அவசியம்.திரையில் அவர்கள் எவ்வளவு நேரம் தோன்றுகிறார்கள் என்பது முக்கியமல்ல; அவர்கள் அந்தக் கதாபாத்திரமாக இரசிகர்களை நம்பவைக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.அந்தவகையில் இந்தப்படத்தின் அனைத்து நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்.
குறிப்பாக சதாவின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.அவரிடம் நான் சொன்னேன்,நீங்கள் மிகவும் அழகாகவும் திரைப்பரிமாணம் கொண்டவராகவும் இருக்கிறீர்கள்;எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகளும் நிச்சயம் வரும்.அதற்கான எல்லா தகுதிகளும் உங்களிடம் இருக்கின்றன.உங்கள் வெற்றிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாடலாசிரியர் மோகன்ராஜனுடன் உருவான பந்தம் இயல்பானது அதற்கு இறைவனுக்கு நன்றி.
இந்தப்படம் மீண்டும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும்.இந்தப்படத்தில் என் டீமில் உழைத்த அனைவருக்கும் நன்றி.இந்தவெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடகங்களுக்கு நன்றி என்றார்.

நடிகர் அர்ஜுன்தாஸ் பேசியதாவது..,

முதலில் பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.படத்தின் முதல்காட்சி முடிந்தபிறகு வெளியே நின்றிருந்த அந்த சில நிமிடங்கள்,தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவரின் பதற்றத்தைப் போலவே இருந்தது.படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது.ஆனால்,சிறிதுநேரத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்தமுகத்துடன் வந்து படத்தைப் பாராட்டிய அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவாக இருக்கும்.
படம் வெளியான பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம்.அங்கு குடும்ப இரசிகர்கள்,குழந்தைகள்,இளைஞர்கள் என அனைவரும் படத்தை இரசித்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.இந்த வெற்றிக்கான முழுபாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கே சேரும்.அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தக்கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி.கதை சொல்லும்போதே இந்தப்படத்தில் ஒரு கனவு நடிகர் பட்டாளம் இருக்கவேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.அது நிஜமாகியிருக்கிறது.இவ்வளவு மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்குப் பெருமை.அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன்.
எடிட்டர் அருள் மோசஸ்,நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர்,இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்,இமான் அண்ணாச்சி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அகில்… இந்தப்படத்தில் முதல்முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன்.படப்பிடிப்பின் முதல்நாளிலேயே என்னை “அப்பா” என்று அழைத்தபோது ஒரு புதியஉணர்வு ஏற்பட்டது.உன்னுடன் பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவம்.இந்தப்படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை “அப்பா” கதாபாத்திரத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஹரிஷ் நகைச்சுவையாகச் சொல்வார்.எதிர்காலத்திலும் மீண்டும் இணைந்து பணியாற்றவேண்டும்.
சதாவுக்கும் என் வாழ்த்துகள்.படப்பிடிப்பின்போதே அவரிடம் நான் ஒரு விசயம் சொன்னேன்.படம் வெளியாகும்வரை வேறு எந்த வாய்ப்பையும் ஏற்கவேண்டாம்.இந்தப்படம் வெளியான பிறகு உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று.இன்று அது நிஜமாகியிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தப்படத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மோகன்ராஜன் சார்,நம்முடைய பயணம் நீண்டது.உங்களுடைய அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றி.இன்னும் பல படங்களில் நாம் இணைந்து பணியாற்றவேண்டும் என்று விரும்புகிறேன்.
ஷான் ரோல்டன் அண்ணா பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.நீங்கள் பேசியபிறகு எனக்கு வார்த்தைகள் இல்லை.இந்தத்துறையில் நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள்.உங்களுடன் இந்தப்பயணம் தொடரவேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
யோகிபாபு சார் இன்று இங்கு இல்லை.ஆனால் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய அனுபவம்.எந்தக்காட்சியாக இருந்தாலும்,ஒரு நகைச்சுவை வசனம் மூலம் படப்பிடிப்புதளத்தையே சிரிப்பால் நிரப்பிவிடுவார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பயணித்தபோது,அவருடைய உற்சாகத்தையும்,எளிமையையும் இன்னும் நெருக்கமாக உணரமுடிந்தது.படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியையும் ஒரேடேக்கில் செய்து முடிக்கும் அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
படம் வெளியான பிறகு இரசிகர்கள்,குறிப்பாக இளைஞர்கள்,சமூக வலைதளங்களில் அவருடைய நடிப்பைப் பாராட்டிய விதத்தை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.அந்த மகிழ்ச்சி அவருடைய முகத்தில் தெரிந்தது.இந்தப்படத்தின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் வடிவுக்கரசி அம்மாதான் என்று நான் நம்புகிறேன்.அவருடைய நடிப்பு இந்தப்படத்தின் முக்கியபலங்களில் ஒன்று.அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவம்.
பரத்,ஐயப்பன் சார்,முத்துக்குமார் சார் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.இந்தப்படத்தை உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிட நீங்கள் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.பல திரையரங்குகளுக்கு நேரில் வந்து,படத்திற்கு கிடைத்த வரவேற்பை மகிழ்ச்சியுடன் இரசித்ததைப் பார்த்ததும் எனக்கும் பெருமையாக இருந்தது.
லல்லு,“கைதி” திரைப்படத்திலிருந்து நம்முடைய பயணம் தொடர்ந்து வருகிறது.இந்தப்படத்திலும் இணைந்ததற்கு நன்றி.அதேபோல் அம்சா நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.முதல்படத்திலேயே இவ்வளவு பெரிய வெளியீட்டை வழங்கியது எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது.
இறுதியாக,பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள்,இரசிகர்கள்,குறிப்பாக குடும்ப இரசிகர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.திரையரங்குகளில் குழந்தைகள் வந்து தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதும்,குடும்ப இரசிகர்கள் இந்தப்படத்தை மனதார பாராட்டியதும் என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
இந்த அன்பும் ஆதரவும்,எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக உழைக்கவேண்டும் என்ற பொறுப்பை எனக்கு அளித்துள்ளது.தொடர்ந்து நல்லபடங்களை உங்களுக்காக வழங்குவேன்.அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகள் என்றார்.

நடிகை வடிவுக்கரசி பேசியதாவது…..

நான் இன்று உங்கள் முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்ததுபோல.அதற்குக் காரணமான அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தவிசயம் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதற்காகவே நான் இதை பகிர்கிறேன்.எனக்கு மறுவாழ்வு கிடைக்க உதவியவர்கள் ராஜ்குமார் சேதுபதி,ஸ்ரீப்ரியா,சுஹாசினி,மணிரத்னம் சார்,கார்த்திக்,சூர்யா,ரஜினிகாந்த் சார்,கமல்ஹாசன் சார்,ஏ.சி.எஸ். சண்முகம்,சரத்குமார் சார்,ராதிகா உள்ளிட்ட பலர்.அவர்கள் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்தார்கள்.இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம்.அந்த அன்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்.
இன்று “கான் சிட்டி” திரைப்படத்தின் 25 ஆவது நாள் வெற்றிவிழாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில்,25 வாரங்கள்,50 வாரங்கள்,100 நாட்கள்,175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றி கொண்டாடப்பட்டன. இன்று 25 ஆவது நாள் விழாவாக இருந்தாலும்,அந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது.இந்த வெற்றிக்கு காரணம் இரசிகர்களும், ஊடகநண்பர்களும்தான்.உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் அதிகமாக யூடியூப் பார்ப்பதில்லை.ஆனால் இந்தப்படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும்,இரசிகர்களின் கருத்துகளையும் பார்த்தேன்.டிரெய்லரை பார்த்துவிட்டு,படம் நன்றாக இருந்தால் பார்ப்போம் என்று நினைத்தவர்கள்,படம் பார்த்தபிறகு “ஒரு நிமிடம்கூட சலிக்காமல் முழுப்படத்தையும் இரசித்தோம்” என்று கூறியதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு,வடிவுக்கரசி அம்மா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பலரும் எழுதியிருந்தார்கள்.அந்தப் பாராட்டுகளை நான் மீண்டும் மீண்டும் படித்தேன்.அவை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன.
ஆனால்,ஊடகநண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது.வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார் என்று மட்டும் எழுதாமல், இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் என்றும் எழுதுங்கள்.அந்த ஒருவரிதான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத்தரும்.
இந்தப்படத்தின் மூலம் என்னை வேறுகோணத்தில் காட்டிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.வடிவுக்கரசி ரஃபாக மட்டுமே பேசுவார் என்ற எண்ணத்தை உடைத்து,எனக்கு நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்து, இரசிகர்களிடம் புதியவரவேற்பைப் பெற்றுத்தந்தார்.அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தமேடை வெறும் நன்றி சொல்லும் மேடை மட்டுமல்ல;இந்தப்படத்தின் மூலம் கிடைத்த அன்பு எனக்கு இன்னும் நிறைய நல்லவாய்ப்புகளைப் பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள்,தயாரிப்பாளர்கள்,பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள், இரசிகர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.நன்றி.வணக்கம் என்றார்.

நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது…..

முதலில் “கான் சிட்டி” திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் மற்றும் முழுபடக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படம் வெற்றி பெற்ற பிறகு இயக்குநர் என்னை அழைத்து சந்தித்தார்.படம் வெற்றி பெற்றால் ஒரு சிறப்புபரிசு தருவதாக முன்பே சொல்லியிருந்தார்.அந்த வாக்குறுதியை மறக்காமல்,ஒரு ஐஃபோனை பரிசாக வழங்கினார்.அந்த நேர்மைக்கும்,நன்றியுணர்வுக்கும் அவருக்கு என் பாராட்டுகள்.
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால்,ஆரம்பத்தில் இந்தப்படத்தை ஒரு சிறியபடம் என்று நினைத்தேன்.ஆனால் படத்தின் பின்னணியில் நடந்த திட்டமிடல்,தயாரிப்பு,விநியோகம்,ஓடிடி ஒப்பந்தம் என அனைத்தையும் பார்த்தபிறகுதான் ஹரிஷின் சிந்தனையும் திறமையும் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டேன்.அதற்காக அவரிடம் நான் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.
ஹரிஷ் ஒரு இயக்குநர் மட்டுமல்ல;தயாரிப்பு,திரைக்கதை,திட்டமிடல் என திரைப்படத்தின் ஒவ்வொரு துறையையும் நன்றாகப் புரிந்துகொண்ட திறமையான படைப்பாளர்.அந்தப் பல்துறை திறமையே இந்த வெற்றிக்குக் காரணம்.
இன்றைய சூழலில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது என்ற பேச்சு பரவலாக இருக்கிறது.அதுபோன்ற காலகட்டத்திலும் “கான் சிட்டி” திரைப்படம் நல்லவசூலைப் பெற்று வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை.அந்த வெற்றி,நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு இரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத்தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.
ஒரு படம் நல்ல வசூல் பெறும்போது,அது அந்தப்படக்குழுவுக்கு மட்டுமல்ல,மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கும் புதிய உற்சாகத்தை அளிக்கிறது.இன்னும் நல்லபடங்களை உருவாக்கவேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கினாலும்,அது இரசிகர்களிடம் சென்று சேர்ந்து வெற்றி பெறும் தருணத்தை விட பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை.“கான் சிட்டி” படத்தின் வெற்றியும் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுத்திருக்கிறது.
ஹரிஷின் அடுத்த திரைப்படம் எப்போது தொடங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது.இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இன்னும் பல சிறந்த படைப்புகளை வழங்கவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது….

முதலில் பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய திரைப்படம் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விசயம்.குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகையால்,சிறிய படங்களை மக்கள் திரையரங்கிற்கு வரவழைப்பது பெரிய சவாலாக மாறிவிட்டது.ஆனால் நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது,அந்தப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.அதற்காகவே இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தவேண்டும் என்று நினைத்தோம்.
இப்போது பெரும்பாலான திரைப்படங்கள் 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை.சிலநாட்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகின்றன.அதனால்,“கான் சிட்டி” திரைப்படத்தின் 25 ஆவது நாள் வெற்றியை உங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.இந்தப்படத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கும்,பாராட்டுகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
என்னுடைய முதல் நன்றி குணா (Post Office) மற்றும் விஜய் (Silver Tree) ஆகியோருக்கே.திரைக்கதை உருவான நாளிலிருந்து இன்றுவரை அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.அவர்களுடைய ஆதரவு இல்லாமல் இந்தப்பயணம் சாத்தியமாகியிருக்காது.
இந்தப்படத்திற்கு நிதி உதவி செய்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.MRP Entertainment நிறுவனத்தின் மகேஷ்,சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம்,மணிகண்டன் சார்,PTG Studios,வெண்ணி,ஜென்னி,என் குடும்பத்தினர்,உறவினர்கள் என இந்தப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
என்னுடைய இணை தயாரிப்பாளர் சித்து குறித்து குறிப்பாக சொல்லவேண்டும்.அவர் ஒருநாள் வந்து கதையைக் கேட்டார்.“கதை பிடித்திருந்தால் முதலீடு செய்யுங்கள்.படத்தை முழுமையாக முடித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்று நான் சொன்னேன். மறுநாளே எந்த தயக்கமும் இல்லாமல் பணத்தை அனுப்பிவைத்தார்.அந்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
அதேபோல் மற்றொரு இணை தயாரிப்பாளரான Cloud Studios நிறுவனத்தின் அருண் அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரை எனக்குத்தெரியும்.எந்தக் கேள்வியும் கேட்காமல்,“தம்பி, நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற ஒரு வார்த்தையோடு இந்தப்படத்தில் முதலீடு செய்தார்.அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இணைதயாரிப்பாளரான விஜய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வெளிநாட்டு வெளியீட்டை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்த T-Series உள்ளிட்ட என் வணிகக் கூட்டாளர்களுக்கும் நன்றி.ஒரு உள்ளடக்கமிக்க திரைப்படத்தை உலகம் முழுவதும் சுமார் 300 திரைகளில் வெளியிட உதவியது மிகப்பெரிய ஆதரவாக அமைந்தது. இந்தப்படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற Netflix நிறுவனத்திற்கும் என் நன்றிகள்.
எங்கள் விநியோகஸ்தரான Delta Studios நிறுவனத்தின் ஐயப்பன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.படம் பார்த்த முதல்நாளிலிருந்தே அவர் இந்தப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கண்காணித்து, ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.நடிகரின் சந்தை மதிப்பையோ,முந்தைய படங்களையோ மட்டும் பார்த்து முடிவு செய்யாமல்,படத்தின் உள்ளடக்கத்தை நம்பி எங்களுடன் இணைந்தது அவருடைய திரைப்படப் பற்றைக் காட்டுகிறது.
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இந்தப்படம்,மொத்தம் சுமார் 95 கால்ஷீட்களில் உருவானது.அந்த நீண்டபயணத்தில் என்னுடன் இணைந்து உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பங்களிப்பும் அளவிட முடியாதது.
ஆக்ஷன் சந்தோஷ் மாஸ்டர்,மிக்ஸிங் இன்ஜினியர் உதய் சார்,கடந்த ஏழுஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் மிகப்பெரிய ஆதரவாளர்.எந்த தயக்கமும் இல்லாமல் இந்தப்படத்தில் பணியாற்றி என்னுடன் இருந்தார்.அவருக்கு என் நன்றிகள்.ஒலிப்பதிவு வடிவமைப்பாளர் சச்சின்,சிறப்பு மேக்கப்கலைஞர் அப்துல்,தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜ்கமல்,எடிட்டர் அருள்மோசஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.குறிப்பாக எடிட்டர் அருள்மோசஸ்,படத்தின் இறுதிநாள் வரை,மிக்ஸிங்,இறுதிச் சரிபார்ப்பு உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்து இந்தப்படத்தை முழுமையாக்கினார்.அவருடைய அர்ப்பணிப்பு இந்தப்படத்தின் முக்கியபலங்களில் ஒன்றாகும்.
இந்தப்படத்தில் நடித்த அனைவரையும் பற்றி பேசவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.குறிப்பாக வடிவுக்கரசி அம்மாவைப் பற்றி சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மூத்தகலைஞர்,இன்றும் “எனக்கு வேலை வாங்கிக்கொடுங்கள்,நான் இன்னும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லுவது எவ்வளவு பெரிய விசயம் என்று நீங்கள் யோசித்துப்பாருங்கள்.நாங்கள் சிலபடங்கள் நடித்துவிட்டாலே திருப்தி அடைந்து விடுகிறோம். ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு கலைஞர் இன்னும் அதே ஆர்வத்துடனும்,அதே பசியுடனும் வாய்ப்புகளை எதிர்பார்த்து நிற்பது எனக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது.அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்ன ஒருவார்த்தை இன்னும் என் மனதில் இருக்கிறது.
“நான் இறந்தாலும்,படப்பிடிப்புதளத்தில்தான் இறக்கவேண்டும்.”
அந்த வார்த்தையைக் கேட்டபோது எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது.சினிமா மீது இவ்வளவு காதலும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு கலைஞருடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று.படப்பிடிப்பு முடிந்தநாளிலேயே நான் அவரிடம் சொன்னேன்,“இந்தப்படம் வெளியான பிறகு அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்” என்று.இன்று அது உண்மையாகி இருப்பதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்து அன்னாபென் கதாபாத்திரம்.இந்தப்படத்தில் மிகவும் முக்கியமானது.ஒரு மகனின் தாயாக,வாழ்க்கையின் பல வேதனைகளை சுமந்து செல்லும் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார்.இந்தக் கதாபாத்திரத்தை மிகையாக இல்லாமல்,மிகவும் இயல்பாகவும் அடக்கமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஒருகட்டத்தில்,“இந்தக்காட்சியில் நீங்கள் இன்னும் அதிகமாக உணர்ச்சியை வெளிப்படுத்தலாம்” என்று சொன்னபோதும்,“இல்லை,என் மகன் காணாமல் போன நிலையில் இருக்கும் இந்தக்கதாபாத்திரம் இப்படித்தான் அமைதியாக இருப்பாள்.நான் இதை மிகைப்படுத்தக் கூடாது” என்று அவர் கூறினார்.அந்த முதிர்ச்சியும்,கதாபாத்திரத்தின் மீது அவர் கொண்டிருந்த புரிதலும் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று மித்ரா கதாபாத்திரம்.இன்றைய சமூகத்தில் அதிகரித்துவரும் விவாகரத்துகள்,தவறான உறவுகள் போன்ற விசயங்களை எந்தப்போதனையும் இல்லாமல்,மிக இயல்பாக அந்தக் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறோம்.அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அன்னாபென் மேடம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நீங்கள் இந்தப்படத்தில் இணைந்த பிறகுதான் இந்தப்படத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்தது.
யோகிபாபு அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.நேற்றுகூட அவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபடியே என்னுடன் பேசினார்.இந்தப்படத்திற்கு அவர் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்.முக்கியமாக,வடிவுக்கரசி அம்மா இந்தப்படத்தில் சிறப்பாக ஜொலிக்கவேண்டும் என்பதில் அவர் முழுமனதுடன் ஒத்துழைத்தார்.திரைக்கதையிலேயே அந்த இடம் இருந்தாலும்,ஒரு நடிகராக அந்தஇடத்தை மற்றொரு கலைஞருக்காக விட்டுக்கொடுப்பது மிகப்பெரிய மனப்பான்மை.படம் முழுவதும் அவர் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால்,யோகிபாபு சார் இந்தப்படத்தில் நடிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை.இருந்தாலும், என் மீது வைத்திருந்த அன்பிற்காகவும் நம்பிக்கைக்காகவும் இந்தப்படத்தில் நடித்தார்.அதற்காக அவருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.
அதேபோல் அர்ஜுன்தாஸ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.இந்தப்படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருக்கின்றன.சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரம்வரை அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.அந்தவகையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் இரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது.ஒரு நடிகராக,மற்ற கதாபாத்திரங்களும் சமமான முக்கியத்துவத்துடன் திரையில் வருவதை ஏற்றுக்கொள்வது பெரியவிசயம்.அர்ஜுன்தாஸ் சார் அந்த மனப்பான்மையுடன் இந்தப்படத்தில் நடித்தார்.அதனால்தான் இந்தப்படம் இவ்வளவு முழுமையானதாக உருவானது.அதுமட்டுமல்லாமல்,போஸ்டர்களில் என் பெயருடன் அனைத்துக் கலைஞர்களின் பெயர்களும் இடம்பெறவேண்டும் என்று முதலில் சொன்னவரும் அவர்தான்.அந்த பெருந்தன்மைக்கும்,ஆதரவுக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
இறுதியாக,என் அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,அண்ணி,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் இந்தப்பயணத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
இந்தப்படத்தை வெற்றிப்படமாக மாற்றிய இரசிகர்கள்,பத்திரிகை மற்றும் ஊடகநண்பர்கள்,தயாரிப்பாளர்கள்,விநியோகஸ்தர்கள், நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts