கடைசி நேர நெருக்கடியில் தனுஷை அதிர வைத்த எஸ்.ஜே.சூர்யா
ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் தனுஷ்.
அதன்பின், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ ஆகிய படங்களில் நடித்தார்.
இவற்றைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் அவரே நாயகன். செப்டம்பர் 6 அன்று குற்றாலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்தப்படத்தில், நாகர்ஜுனா, அதிதி ராவ், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார்.
முதலில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வேடத்தில் கன்னட நடிகர் சுதீப் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் படத்தில் நடிக்காமல் விலகிக்கொண்டாராம்.
அதனால் அவசர அவசரமாக எஸ்.ஜே.சூர்யாவை அணுகினார்களாம். அவரும் தனுஷின் நெருக்கடியைப் புரிந்துகொண்டு நடிக்கச் சம்மதித்தாராம்.
சிக்கல் தீர்ந்தது என்று தனுஷ் நிம்மதிப் பெருமூச்சு விட்டுமுடிக்குமுன்பு, எஸ்.ஜே.சூர்யா கேட்ட சம்பளம் தனுஷை அதிர வைத்துவிட்டதாம்.
கேட்ட சம்பளத்தை விடக் குறைவு என்றால் நடிக்க இயலாது என்றும் சொல்லிவிட்டாராம் எஸ்.ஜே.சூர்யா.
கடைசியில் புலம்பிக்கொண்டே அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல். அப்படி அவர் கேட்ட சம்பளம் எவ்வளவு? நான்கு கோடி என்கிறார்கள்.










