சினிமா செய்திகள்

அனிருத் கேட்ட பத்து கோடி – அதிர்ந்த நிறுவனம்

தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜீத் ஆகிய முன்னணி நடிகர்கள் உட்பட தமிழின் முக்கியமான கதாநாயகர்கள் படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறார்.

இப்போது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.

இவர் ஒரு படத்துக்கு இசையமைக்க இரண்டரை கோடி அல்லது மூன்று கோடி சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார்.

அண்மைக்காலமாக அவர் இசையமைத்த படங்கள் வெற்றி பெற்றன என்பதாலும் பாடல்கள் வரவேற்புப் பெற்றன என்பதாலும் தன் சம்பளத்தைச் சட்டென உயர்த்திவிட்டாராம்.

இப்போது லைகா நிறுவனம் ரஜினிகாந்த்தை வைத்து இரண்டு புதிய படங்களைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

அவற்றில் ஒரு படத்தின் தொடக்கவிழா இன்னும் இரண்டு நாட்களில் அதாவது நவம்பர் 5 ஆம் தேதி நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இவ்விரு படங்களுக்கும் அனிருத் இசையமைக்க வேண்டும் என்று நினைத்து அவரை அணுகியிருக்கிறார்கள்.

அவரோ இப்போது என் சம்பளத்தை உயர்த்திவிட்டேன், ஒரு படத்துக்கு ஐந்து கோடி சம்பளம், இரண்டு படங்களுக்கும் சேர்த்துப் பத்து கோடி சம்பளம் என்றால் இசையமைக்கிறேன் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.

இதைச் சற்றும் எதிர்பாராத லைகா நிறுவனத்தினர் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம்.அதனால், அவ்வளவு சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்யலாமா? அல்லது வேறு இசையமைப்பாளரிடம் போகலாமா? என்று விவாதம் நடக்கிறதாம்.

முடிவு பெரும்பாலும் அனிருத்துக்குச் சாதகமாகவே அமையும் என்கிறார்கள். பார்க்கலாம்.

Related Posts