ஒரே நேரத்தில் சிம்பு தனுஷ் படம் – தயாரிப்பு நிறுவனம் அதிரடி

மார்ச் 9,2023 அன்று சிம்புவின் 48 ஆவது படமான அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அந்நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர்கள் என்கிற அறிவிப்பு வெளியானது.
அந்தப்படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங்குபெரியசாமி இயக்கவிருக்கிறார்.
இவர்கள் இருவர் தவிர வேறு யார் பெயரையும் அவர்கள் அறிவிக்கவில்லை.
இவ்வறிப்பு அடங்கிய காணொலியை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன், சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! என்று கூறியிருந்தார்.
அதன்பின்,அந்தப்படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
இந்நிலையில்,அந்தப்படத்துக்காக நீண்ட தாடி வளர்த்திருந்த சிம்பு அதைக் குறைத்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைஃப் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.
அதன்பின், தேசிங்குபெரியசாமி படம் கைவிடப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், அப்படம் கைவிடப்படவில்லை தயாரிப்பு நிறுவனம் மாறியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் மொத்தச் செலவு பெரியது என்பதாலும், வேல்ஸ் நிறுவனத்துடன் சிக்கல் இருப்பதாலும் அந்தப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் கைவிட்டுவிட்டதாம்.
இடையில், ராஜ்கமல் மற்றும் வேல்ஸ் ஆகிய இருநிறுவனங்களும் இணைந்து அந்தப்படத்தைத் தயாரிக்கலாம் என்றும் பேசப்பட்டிருக்கிறது.ஆனால்,அது சரியாக அமையாது என்கிற நிலை.அதனால் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தைக் கைவிட்டிருக்கிறது.
அதனால் அப்படக்குழுவினர் சோர்ந்துவிடவில்லை. மேலும் உற்சாகமாக அடுத்த கட்டத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்களாம்.
ஆம்,அந்தப்படத்தைத் தயாரிக்க மும்பையைச் சேர்ந்த இருநிறுவனங்கள் முன் வந்திருக்கின்றனவாம்.
கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் அப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.
அதன்பின் இப்படத்துக்காக புதிய அலுவலகம் திறக்கும் பணி, படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான வேலைகளுக்காக புதிய திட்டமிடல் ஆகிய வேலைகள் வேகமாகத் தொடங்கியிருக்கின்றன என்கிறார்கள்.
இன்னொரு முக்கிய தகவல் என்னவென்றால்? சிம்பு படத்தைத் தயாரிக்கும் இந்த நிறுவனங்கள் இன்னொரு தமிழ்ப்படத்தையும் தயாரிக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றன.
அந்தப்படம்,அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இளையராஜா படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக தமிழ்த் திரையுலகுக்குள் வரும் நிறுவ்னங்கள் ஒரே நேரத்தில் தனுஷ் சிம்பு ஆகிய இருவரும் நடிக்கும் படங்களைத் தயாரிக்கவிருக்கின்றன என்பது எதிர்பாராவியப்பு.