October 17, 2026
சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலகில் நடக்கும் புத்தம்புது முயற்சி – உடனே ஆதரவு கொடுத்த விஜயசேதுபதி

கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தமிழ்த்திரையுலகுக்கு உற்சாகமூட்ட ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது ஒரு குழு.

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரும் அந்த முயற்சியில் முன் நிற்கிறார்கள்.

இவர்கள் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது.

அந்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ்.கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.

இதிலென்ன புதுமுயற்சி? 

இருக்கிறது.

இந்தப்படத்தில் இயக்குநர், நாயகன், மற்ற நடிகர்கள் உட்பட யாருக்கும் சம்பளம் பேசப்படவில்லை. படப்பிடிப்பு மற்றும் பட வெளீயீட்டுக்கான செலவை மட்டும் செய்து படமெடுக்கப்போகிறார்கள்.

அதற்காக இவர்கள் ஒதுக்கியிருக்கும் தொகை இரண்டு கோடி. 

இந்த இரண்டு கோடியில் படத்தை எடுத்து அதை வியாபாரம் செய்வார்கள். பத்துகோடிக்கு வியாபாரம் நடக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் குறிப்பிட்ட விழுக்காடு தொகை ஒவ்வொருவருக்கும் சம்பளமாக வழங்கப்படும்.

இப்படி ஒரு முயற்சி செய்கிறோம் என்றதுமே கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், விஜய்சேதுபதி ஆகியோர் நாங்கள் உடன்படுகிறோம் என்று ஒத்துழைப்புக் கொடுக்கின்றனராம்.

முதலில் போடப்படும் இரண்டு கோடியையும் இருநூறு பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். ஒருவர் அதிகபட்சம் பத்து பங்குகள் வரை வாங்கலாம் என்கின்றனர்.

இந்த முயற்சி நல்லபடியாக செயல்படுத்தப் பட்டால், படங்களின் வியாபார அடிப்படையில் சம்பளம் எனும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். அப்படி நடந்தால் தயாரிப்பாளர்கள் மட்டும் பல கோடி நட்டப்பட்டு மூலையில் முடங்கிக்கிடக்கும் நிலை வராது என்கின்றனர்.

ஓட்டுமொத்தத் திரைத்துறையும் செழிப்பாக இருக்கும் என்கிறார்கள்.

Related Posts