சினிமா செய்திகள்

சூரி நடிக்கும் புதியபடம் மாமன் – விவரங்கள்

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இப்போது கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.வெற்றிமாறன் இயக்கம் விஜய்சேதுபதி உள்ளிட்டோருடன் அவரும் நடித்திருந்தார்.அதன்பின் சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் நடித்த கருடன் ஆகிய படங்கள் வசூல் வெற்றியையும் கொட்டுக்காளி படம் கருத்தியல் வரவேற்பையும் பெற்றது.

கருடன் வெற்றிக்குப் பிறகு அவர் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார் என்றும் சில முன்னணி இயக்குநர்களுடன் இணையும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன என்றும் சொல்லப்பட்டது.

ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று அடுத்து சூரி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.விமல் நடித்த விலங்கு என்கிற இணையத் தொடரை இயக்கியவர் அவர்.அந்தத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடராக அமைந்தது.அதன்பலனாக சூரி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்தப்படத்தை,சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ்,மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்த சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் மற்றும் சூரியின் கருடன் ஆகிய படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் குமார் தயாரிக்கிறார்.

அன்றைய தினம் சூரி வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில்,’கருடன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் திரு.கே. குமாருடன் இணைகிறேன்.‌ இத்திரைப்படத்தை ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய திரு‌.பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.

என்றென்றும் உங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்குகிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்தப்படத்தில்,பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய படங்களில் விஜய்சேதுபதி சசிகுமார் ஆகியோர் சூரியின் வெற்றிக்குத் துணையாக இருந்தனர்.இப்போது அவர் மட்டுமே முழுமையான கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படம் இது என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின் தொடக்கவிழா மற்றும் படப்பிடிப்பு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்குகிறது.

இது குடும்ப உறவுகள் அது தொடர்பான உணர்வுகளை மையமாகக் கொண்ட படம் என்று சொல்லப்படுகிறது.அதனால் இந்தப்படத்துக்கு மாமன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பெயரும் கதையும் பி அண்ட் சி என்று சொல்லப்படும் இரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்படும் படமாக இருக்கும் என்பது தெரிகிறது.

அதனால் இந்தப்படமும் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும் என்பது படக்குழுவினரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Related Posts