சினிமா செய்திகள்

திரெளபதி 2 படத்தில் மத துவேசம்? – பரபரக்கும் தகவல்

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி,ருத்ர தாண்டவம் ஆகிய படங்களின் இயக்குநர் மோகன்.ஜி தற்போது இயக்கியிருக்கும் படம். திரெளபதி 2. இதில் நாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். நாயகியாக ரக்‌ஷனா இந்துசூடன் நடித்துள்ளார்.இப்படத்தில் நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு எழுத்தாளர் பத்மா சந்திரசேகர், மோகன்.ஜி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக பிலிப் ஆர்.சுந்தர், இசை அமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்துக்கு தணிக்கை சான்று கிடைத்துவிட்டதாகவும் யு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் மோகன் ஜி இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவருடைய பதிவில்…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுவரை நமக்கு சொல்லபடாத கதை.. வரலாற்றுப் பக்கங்களின் இருண்ட காலமான 14 ஆம் நூற்றாண்டு பற்றிய பதிவு.. தென் இந்தியாவின் சரித்திரம் உயிர்தெழுகிறது
திரெளபதி 2 தணிக்கை செய்யப்பட்டது.. இந்த மாதம் திரையில்.

என்று கூறியுள்ளார்.

இப்படத்தில், 14 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் முகலாயர்கள் கால்பதிக்கும் காலத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைத் தலைநகரமாக கொண்டு தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த இரத்த சரித்திரமாக ’திரெளபதி 2’ உருவாகி வருவதாக படக்குழு சார்பில் சொல்லப்பட்டது.

திரெளபதி படம் ஆதிக்கச் சாதியினருக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படம் என்கிற விமர்சனங்களைச் சந்தித்தது.

திரெளபதி 2 படத்தில் இந்துக்களை வஞ்சித்து கொலை செய்து,கொடூரமாக நடந்து கொண்டு ஆட்சியைப் பிடித்து பெரும்பான்மை மக்களை அடக்கியாண்டனர் என்பதையும் அவர்களை ஓர் இந்து மன்னர் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதை கதைக்களமாக வைத்து சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராகப் படம் நெடுக காட்சிகளும் வசனங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இதனால்தான் படத்தின் குறுமுன்னோட்டம், முன்னோட்டம் ஆகிய எதனையும் வெளியிடாமல் வைத்திருந்தார்களாம்.

அப்படி வெளியிட்டால் அதில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் வெளியில் தெரிந்துவிடும் அது படத்துக்குத் தணிக்கைச் சான்று பெறுவதில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று நினைத்து வெளியிடாமல் வைத்திருந்தார்கள் என்று சொல்லப்பட்டது.

எதையும் வெளியில் காட்டாமல் தணிக்கைச் சான்று வாங்கிவிட்டார்கள்.இம்மாதமே படத்தை வெளியிடவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

முதல்படத்தில் சாதிய வன்மத்தை வெளிப்படுத்திய இயக்குநர் இப்படத்தில் மதரீதியான வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.இதனால், இப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என்று திரையுலக வட்டாரங்களில் பேச்சு உலவுகிறது.

என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
.

Related Posts