பராசக்தி கதை திருட்டு சர்ச்சை – புகாரளித்தவர் திடீர் அறிக்கையால் பரபரப்பு
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம்,2026 தமிழர் திருநாளை முன்னிட்டு சனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதவி இயக்குநரான ராஜேந்திரன்,சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எனது செம்மொழி கதையையும் பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அவர் அளித்துள்ள மனுவில்…
நான் 2010 ஆம் ஆண்டு தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் செம்மொழி என்ற பெயரில் கதை ஒன்றைப் பதிவு செய்திருந்தேன்.அது 1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பைக் கண்டித்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செம்மொழி கதையை அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியிடம், நான் உதவி இயக்குநராக அவர் கதை, வசனம் எழுதிய பெண் சிங்கம் படத்தின் ஷூட்டிங்கின்போது கூறினேன். ஆனால் அப்போது தன்னை மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியிருப்பதால் கதையைத் தொடர்ந்து எழுதும்படி எனக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கிடையில் நான் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்த கதையைப் படமாக்கும் பொருட்டு பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்தேன்.
இதில் தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் நடிகர் சூர்யாவிடம் எனது கதையைக் கொடுத்துள்ளார். அவர் அதனை இயக்குநர் சுதா கொங்கராவிடம் கொடுக்க அது புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த செம்மொழி கதை கைவிடப்பட்ட நிலையில் தற்போது பராசக்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும் இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பராசக்தி படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எனது செம்மொழி கதையையும் பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு டிசம்பர் 26 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு கதைகளும் ஒன்று தானா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து 2026, ஜனவரி 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸூக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அனைத்து தரப்பிரனரையும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கையை வரும் ஜனவரி 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி கெடு விதித்துள்ளார். எனவே, ஜனவரி 2 ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் முடிவிலேயே, இது உண்மையிலேயே திருடப்பட்ட கதையா அல்லது உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கா என்பது தெரியவரும்.
இந்நிலையில், வழக்கு தொடர்ந்துள்ள எழுத்தாளர் கே.வி.ராஜேந்திரன் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்…
எனது பதிவு செய்யப்பட்ட படைப்பு செம்மொழி மற்றும் எதிர்தரப்பு முடிக்கப்பட்ட திரைப்படமான பராசக்தி தொடர்பான கதைத் திருட்டு புகாரில் எழுத்தாளர் சங்கம் மேற்கொள்ளும் விசாரணை முறை தீவிர கவலை தருவதாக உள்ளது.
இது என் கதைக்காக மட்டும் அல்ல,எழுத்தாளரின் அடிப்படை மரியாதைக்காகவும் பதிவு செய்யப்பட்ட ஸ்கிரிப்ட் முழுமையாக மதிப்பிடப்படவேண்டும்.உண்மை என்பது சுருக்க வழிகளால் மறைக்கப்படக்கூடாது.
எழுத்தாளர் சங்கம் குறைந்த பட்சம் பத்து பக்க கதைச்சுருக்கம் மட்டுமே கோருவது 56 பக்க முழுஸ்கிரிப்ட் பதிவு ஆதாரம் (பதிவெண் 02378/MN 678,27 ஜனவரி 2025) உள்ள நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாதது. சுருக்கம் மட்டும் கொண்டு ஒப்பிடுவது ஒரு முழுமையான விசாரணையாக இருக்க முடியாது.
கதைச் சுருக்கம் எளிதில் திருத்தலாம்,மாற்றலாம், பின்னர் ஏற்படுத்தலாம்.நியாயமான முறையாக என் பதிவு செய்யப்பட்ட முழு ஸ்கிரிப்ட் எதிர்தரப்பு முழு ஸ்கிரிப்ட் முடிக்கப்பட்ட திரைப்படத்துடன் ஒப்பிடவேண்டும்.
எனது புகாருக்கு ஆதாரமாக பதிவு சான்றுகள்,சங்கக் கடிதங்கள்,மின்னஞ்சல் தொடர்புகள்,நினைவூட்டல்கள் ஊடக அறிவிப்பு ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரக் கோப்புறை (Evidence Docket) நீதிமன்றத்தில் / சங்கங்களில் சமர்பிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பல்வேறு படைப்புச் சார்ந்த வகைப்பாடுகளில் (கதை அமைப்பு,கதாபாத்திரங்கள்,கதையின் முதுகெலும்பு,உணர்ச்சி முதுகெலும்பு,காட்சி வரிசை, மோதல்,உச்சம்,ட்ரீட்மெண்ட்/சாயல் போன்றவை)வகை வகையாக (Category Wise) ஒப்பீட்டு மதிப்பீடு வழங்க வேண்டும் என்றும் அணுகல் (Access) மற்றும் தவறான கைப்பற்றல் எவ்வாறு நடந்திருக்கலாம் என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரியுள்ளேன்.
நீண்டகால தாமதம் மற்றும் அழுத்தத்திற்குப் பிறகே முன்னேறும் நடவடிக்கைகள் போன்றவை, முறையான முழு ஆவண அடிப்படையிலான விசாரணை இல்லையெனில்,இறுதியில் வழங்கப்படும் கருத்துக் கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை உருவாக்கும்.
இது நீதிமன்ற தீர்ப்பு அல்ல,என் கவலைகளை பதிவில் வைப்பதும், எழுத்தாளர் சங்கம் ஒரு முழுமையான,முறையான வெளிப்படையான விசாரணை மூலம் அனைத்து சந்தேகங்களையும் நீக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ஜனவரி 2,2026 க்கு முன் எழுத்தாளர் சங்கம் தரும் பதில் / உறுதிப்பாட்டின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சனவரி 2 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில் அதில் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் எழுத்தாளர் சங்க விசாரணை அறிக்கை குறித்து ராஜேந்திரன் இப்படி ஓர் அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











