செய்திக் குறிப்புகள்

சீயான் 63 படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – விவரம்

விக்ரம் நடிப்பில்,ஆனந்த் சங்கர் இயக்கும் புதியபடம் நேற்று விக்ரம் பிறந்தநாளையொட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு….

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிககரான சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு,அவரது புதியபடம் இரசிகர்களுக்குச் சிறப்புப் பரிசாக அறிவிக்கப்படுகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

இந்தப்படத்தின் அறிவிப்பு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது.இந்த புரோமோ வீடியோ இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ இப்போதே இரசிகர்கள் மத்தியில்,படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பெருமளவில் உயர்த்தியுள்ளது.

தனித்துவமான கதைக்களம் மற்றும் ஸ்டைலிஷ் திரைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 இல் சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்கிய “இருமுகன்” படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.தற்போது இந்தக் கூட்டணி 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது இரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி.தியாகராஜன் வழங்க, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர்.

தனித்துவமான பின்னணி இசைக்காக புகழ்பெற்ற சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவரின் இசை இந்தப் படத்தின் மாஸ் மற்றும் எமோஷனல் அம்சங்களை மேலும் உயர்த்தும்.

அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய,கலைஇயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றுகிறார். வசனங்களை ஷான் கருப்புசாமி எழுதுகிறார்.தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன்,படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களின் தொழில்நுட்ப பங்களிப்பு படத்தின் காட்சியமைப்பை உலகத்தரத்தில் கொண்டு செல்லும்.

“சீயான் 63” படம், சீயான் விக்ரமின் திரை வாழ்க்கையில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் பெயர் பெற்ற அவர், இந்தப்படத்திலும் புதியபரிமாணத்தில் இரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார் என நம்பப்படுகிறது.

மொத்தத்தில், வெற்றிகரமான கூட்டணி, திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் பெரிய அளவிலான தயாரிப்புடன் உருவாகும் இந்த “சீயான் 63” பட அறிவிப்பு, அவரது பிறந்தநாளில் இரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Related Posts