தி பெட் – திரைப்பட விமர்சனம்
வாரவிடுமுறையை உல்லாசமாகக் கழிக்க சென்னையிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் நாயகன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நால்வர் விலைமகளிரான நாயகி சிருஷ்டிடாங்கேவையும் அழைத்துச் செல்கிறார்கள்.ஊட்டியில் நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.என்ன நடந்தது? எதனால் நடந்தது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் தி பெட் படம்.
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், மென்பொருள்துறை பணியாளர் வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.விலைமகள் எனினும் அவர் மீது காதல் கொண்டு அவரைப் பாதுகாக்கத் துடிக்கும் காட்சிகளில் பாராட்டுப் பெறுகிறார்.எதிர்பாரா சிக்கல் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
விலைமகளிர் வேடமேற்றிருக்கும் சிருஷ்டிடாங்கே உடைகளில் அதைக்காட்டி விடாமல் நடிப்பிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிளாக் பாண்டி,விஜே பப்பு,விக்ரம் ஆகியோரில் முதலிருவர் ஒரு மாதிரி நடித்தும் மூன்றாமவர் வேறுமாதிரி ஆகியும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஜான்விஜய் அளவாக நடித்திருக்கிறார்.உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் தேவிப்ரியா நன்று.
சிருஷ்டிடாங்கேவின் அம்மாவாக திவ்யா நடித்திருக்கிறார்.அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு ஏற்றுக்கொள்ள இயலாதது என்றாலும் அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
மொத்தக் கதையும் ஊட்டியில் நடப்பதால் ஒளிப்பதிவாளர் கோகுல் வேலை எளிது என்று நினைத்துவிடாதபடி திரைக்கதையின் போக்கிற்கேற்ற இடங்களைத் தேடித் தேடி நமக்குக் காட்டி மகிழ்வூட்டியிருக்கிறார்.
தாஜ்நூர் இசையில் பாடல் இரசிக்கும் இரகம்.பின்னணி இசையில் படத்தை முன்னணிக்குக் கொண்டுவர உழைத்திருப்பது தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.மணிபாரதி.மாந்தர்கள் கதை சொல்வது போல் இல்லாமல்,ஒரு விடுதியின் படுக்கை, கதை சொல்வது போல் கதை எழுதியிருப்பதும்,அதற்கு, இரகசிய திருப்பங்களைக் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருப்பதும், ஒரு விலைமகளிரை நாயகி என வைத்துக் கொண்டு நயத்தக்க நாகரிகத்துடன் காட்சிகள் வைத்திருப்பதும் வரவேற்புக்குரிய விசயங்கள்.
எந்தக் கதையாக இருந்தாலும்,போரடிக்காமல் கொண்டு சென்று இரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட வேண்டும் என்பது பொதுவிதி.அதை முறையாகக் கடைபிடித்திருப்பது இயக்குநரின் பலம்.
– இளையவன்











