விழா மேடையில் நடந்த வியாபாரம் – வாழ்க விவசாயி படக்குழு நெகிழ்ச்சி
அப்புக்குட்டி கதைநாயகனாகவும், நடிகை வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் வாழ்க விவசாயி. இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர்
பி.எல்.பொன்னி மோகன்.
அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் சந்திரசேகரன்.
அவர் பேசுகையில்,
இந்தப் படத்தின் விழாவில் கலந்துகொள்ளுமாறு நடிகர் அப்புக்குட்டியும், படக்குழுவினரும் சில தினங்களுக்கு முன் என்னைச் சந்தித்தனர். அப்போது படத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
படத்திற்கு ‘வாழ்க விவசாயி’ என்று டைட்டில் வைத்திருந்தது பாஸிட்டிவ்வாக இருந்தது. அது எனக்குப் பிடித்தது. தற்போதைய சூழலில் விவசாயிகளைப் பற்றி வணிகரீதியான படங்களில் சில இடங்களில் மட்டும் விவசாயத்தைப் பற்றி வசனங்களாக மட்டுமே இருக்கும்.
தயாரிப்பாளரைப்பற்றி எனக்கு முன்பே வேறு வகையில் தெரியும். தயாரிப்பாளர் இந்தப் படத்தின் கதையை நம்பிப் படமெடுத்திருக்கிறார்.
அவருக்கு வணிகத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்பதையும் பேசும் போது தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அவர்களின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்களைப் பார்த்த பின்னர் தான் இந்தப் படத்தின் தரம் எனக்குத் தெரிந்தது.
இப்போது சொல்கிறேன்.இப் படத்தை நான் வெளியிட முடிவு செய்திருக்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் சொல்லி விட்டார் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை. இப்படத்தின் தரமும், கன்டென்ட்டும் எனக்குப் பிடித்திருக்கிறது.
இது போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஊடகம் தான் சிறந்த ஸ்பான்ஸர். இந்தப் படத்திற்கு வேறு ஒரு தினத்தில் இதனை விட வித்தியாசமான முறையில் விழா ஒன்றை வைத்து வெளியீட்டை அறிவிக்கிறேன்.
அதற்கு முன்னதாக படக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்துவேன்.இந்தப் படத்தை திட்டமிட்டு, விளம்பரப்படுத்தி, நல்லமுறையில் தியேட்டருக்குக் கொண்டு வந்துவிடுவேன்.
ஆனால் தியேட்டருக்கு ரசிகர்கள் வருகை தந்து என்னையும் வெற்றி பெறச் செய்யவேண்டும். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடனஇயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.வாழ்த்துகள் என்றார்.
மேடையிலேயே படத்தை வாங்கி வெளியிடுகிறேன் என்று அவர் சொன்னதால் படக்குழுவினர் மொத்தப்பேரும் எழுந்து நின்று வணங்கி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.











