சினிமா செய்திகள்

சிம்புவின் 50 ஆவது படத்தில் அதிரடி மாற்றம் – விவரம்

நடிகர் சிலம்பரசன் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதியன்று மூன்று படங்களின் அறிவிப்பை வெளியிட்டார்.

அவருடைய 49,50,51 ஆகிய படங்களின் அறிவிப்பு வெளியானது.

இவற்றில் எஸ்டிஆர் 49 படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தில் கல்லூரி ஆசிரியராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

எஸ்டிஆர் 50 படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

இப்படம் முதலில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் எஸ்டிஆர் 48 என்ற பெயரில் திட்டமிடப்பட்டது.இப்படத்தின் பெரும் செலவு காரணாமாக அது நடக்கவில்லை.அதனால் அப்படத்தை ஆத்மன் சினி ஆர்ட்ஸ் மூலம் அவரே தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் 51 ஆவது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.காட் ஆஃப் லவ் என்கிற பெயரிட்டு முதல்பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிவிக்கப்பட்ட இந்த மூன்று படங்களில் 49 ஆவது படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் 51 ஆவது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐம்பதாவது படத்தைத் தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால், அந்தப் படத்தயாரிப்புக்குப் பணம் செலவிடுவது வேறொரு நிறுவனம் என்று சொல்லப்பட்டது.துபாயில் இயங்கிவரும் ஒரு நிறுவனம் அந்தப்படத்தைத் தயாரிக்கப் பணம் தருவதாகவும் முதல்பிரதி அடிப்படையில் சிம்புவின் நிறுவனம் தயாரித்துத் தருவதாகவும் சொல்லப்பட்டது.

இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாம்.அப்படம் தயாரிக்கப் பணம் தருவதாகச் சொன்ன துபாய் நிறுவனம் அதிலிருந்து விலகிக் கொண்டதாம்.அதனால் எஸ்டிஆர் 51 படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனமே எஸ்டிஆர் 50 படத்தைத் தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறதாம்.

இந்தப்படத்துக்காகத் தான் நீண்ட தாடி தலைமுடி வளர்த்திருந்தார் சிம்பு.அதோடுதான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதனால்,இப்போது இருக்கும் தலைமுடி தாடியோடு 50 ஆவது படத்துக்கான முன்னோட்டப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். விரைவில் அதன் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

அது முடிந்ததும் தலைமுடியைக் குறைத்துக் கொண்டு இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 49 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

49 மற்றும் 51 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முதலில் நடக்கும் என்றும் அதன்பின் 50 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts