மனுஷி பட சிக்கல் – வெற்றிமாறன் கோபிநைனார் மோதல்?

2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நைனார். இவர் இப்போது நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘மனுசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாசர், தமிழ், ஹக்கிம் ஷா,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முன்னோட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியிடப்பட்டது.அந்தமுன்னோட்டத்தில்,
வீட்டிலிருக்கும் ஆண்ட்ரியா காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவருக்கு பல்வேறு சித்ரவதைகள் நடக்கின்றன. அவரை நோக்கி தொடர் கேள்விகள் எழுப்படுகின்றன. விசாரணை அதிகாரிகளாக நாசர், தமிழ், ஹக்கிம் ஷா ஆகீயோர் வருகின்றனர்.
ஒரு பொண்ண அடிக்கிறது தப்புங்குற குற்றவுணர்வு இல்லாதவன் கூட எப்டி மேடம் வாழ்றது?, எங்க பேர எங்க விருப்பபடி எழுத விடமாட்டீங்களா?, சாதி, மதம், நிறம், வர்க்கம் உருவாக்கியிருப்பதை அறிவியல் மூலமா மாத்த விரும்புறேன், ஒரு விளையாட்டுல வெறும் இந்தியனா எப்படி பதில் சொல்ல முடியும்? போன்ற வசனங்களால் கவனம் ஈர்த்தது அந்த முன்னோட்டம்.கறுப்பு உடை, பெரியார் புகைப்படம், இராமசாமி என்கிற பெயர் ஆகியனவும் அதில் இடம்பெற்றிருந்தன.
இப்போதுவரை அந்தப்படம் எப்போது வெளியாகும்? என்கிற அறிவிப்பு வரவில்லை.
என்னாச்சு?
அந்தப்படத்தை தணிக்கைக்கு அனுப்பியபோது அதன் பல வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளைக் காரணம் காட்டி சான்று தர மறுத்துவிட்டதாம் சென்னை தணிக்கைத்துறை.அதனால் ரிவைசிங் கமிட்டி எனப்படும் திருத்தக்குழுவுக்குப் படத்தை அனுப்பியிருக்கிறார்கள்.அக்குழுவினரும் இவர்கள் சொன்ன காரணத்தைக் கூறி சான்று தர மறுத்துவிட்டார்களாம்.
அதன்பின் வேறுவழியின்றி தணிக்கைத்துறை சொன்ன மாற்றங்களைச் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது.
படத்தில் கம்யூனிஸ்ட் என்கிற சொல், ஒரு காவலரின் நெற்றியில் இருக்கும் நீண்ட பொட்டு,குழந்தைகளுக்கு அறிவியல் கற்றுக் கொடுப்பேன் என்று சொல்வது ஆகியனவற்றைக் கூட மாற்றியாக வேண்டும் என்கிற நிபந்தனைகளை விதித்திருக்கிறார்களாம்.
அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்படுத்த தயாரிப்பாளர் வெற்றிமாறன் முன்வந்திருக்கிறார் என்றும் அதில் இயக்குநர் கோபிநைனாருக்கு முழு உடன்பாடு இல்லையென்றும் சொல்லப்படுகிறது.ஆனால் தணிக்கைத்துறை சொன்னதையெல்லாம் செய்யவேண்டுமென வெற்றிமாறன் வலியுறுத்தியதால் இயக்குநர் கோபிநைனார் கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார் என்றும் அதனால் வெற்றிமாறனே அந்த மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் உலா வந்தன.
இதுதொடர்பாக இயக்குநர் கோபிநைனாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, சென்சார் சர்டிபிகேட் தர மறுத்ததால் ரிவைசிங் கமிட்டிக்கு போனோம்.அங்கும் தரவில்லை.அதனால் அவர்கள் சொன்ன மாற்றங்களைச் செய்து மறுபடி முதலிலிருந்து தொடங்கவேண்டும் என்றார்.
இதனால் உங்களுக்கும் வெற்றிமாறனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கள் கோபித்துக் கொண்டு போய்விட்டதாகத் தகவல் என்று கேட்டதற்கு,வசனங்களை மாற்றியமைப்பதில் இருவருக்கும் வெவ்வேறு கருத்து வந்தது இது இயல்பானதுதானே.இப்போது அவர் வெளியூர் சென்றிருக்கிறார்.அவர் சென்னை வந்ததும் அடுத்து என்ன? என்பது பற்றிப் பேசி முடிவெடுத்து செயல்படுத்துவோம் என்றார்.