சினிமா செய்திகள்

ஜனநாயகன் படக்காட்சிகளில் மாற்றம் – உண்மை என்ன?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய்,மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தணிக்கைச் சான்று கொடுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக தணிக்கை வாரியத்திலிருந்து படக்குழுவுக்கு மின்னஞ்சல் வந்துவிட்டது ஏப்ரல் 24 ஆம் தேதி சான்றிதழ் கிடைத்துவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாகத் தகவல் உலவிக்கொண்டிருந்தது.

அதனால், ஜனநாயகன் படத்தை மே 7 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியிட்டுவிடலாம் என்று திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தபடி சான்றிதழ் கிடைக்கவில்லையாம்.மாறாக மீண்டும் ஒருமுறை படம் பார்த்துவிட்டுத்தான் சான்றிதழ் தருவோம் என்று தணிக்கை வாரியம் கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால்,திடுக்கிட்ட தயாரிப்பு நிறுவனம், மே 7 அல்லது 14 ஆம் தேதியில் படத்தை வெளியிடலாமா? அதற்கான வாய்மொழி உத்தரவாதம் கொடுத்தால் கூடப் போதும், நாங்கள் அதற்கான வேலைகளைப் பார்ப்போம் என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு,அப்படி எந்த உத்தரவாதமும் கொடுக்கவியலாது என்று தணிக்கை வாரியம் சொல்லிவிட்டதென்கிறார்கள்.அதோடு,தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்ட பின்பே சான்றிதழ் கிடைக்கும் என்று வாய்மொழியாகச் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

இந்நிலையில்,ஜனநாயகன் படம் முழுமையாகக் கசிந்துவிட்டதால் இப்போது படத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்றும் அதன்பின் மறுபடி தணிக்கைக்குழு பார்ப்பதில் சில தாமதங்கள் ஏற்படுகின்றன விஜய் தரப்பிலிருந்து தகவல்கள் கசியவிடப்பட்டன.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல தணிக்கைச் சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என்றொரு தகவலை உலவவிட்டார்களாம்.

ஆனால்,அதில் கொஞ்சமும் உண்மையில்லை.படத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதோடு, நேற்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், யஷ் நடிப்பில் உருவாகி, ஜூன் 4, 2026 இல் வெளியாகவிருந்த ‘டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-Ups) திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கும் ஜனநாயகன் வெளியீட்டுக்கும் தொடர்பு இருக்கிறதெனச் சொல்லப்படுகிறது.

மே 5 ஆம் தேதிக்குப் பிறகு ஜனநாயகன் படத்துக்குத் தணிக்கைச் சான்று கிடைத்துவிட்டாலும் அவசரமாக உடனே வெளியிடாமல், ஜூன் 4 அன்று வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

தணிக்கைச்சான்று கையில் வந்ததும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts