கவினின் மாஸ்க் வெளியீடு எப்போது?

நடிகர் கவின் இப்போது மாஸ்க்,கிஸ்,மற்றும் விஷ்ணுஎடவன் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றில்,மாஸ்க் படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார்.
கவின் நாயகனாக நடிக்கும் மாஸ்க் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பால சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
மாஸ்க் படத்தின் பணிகள் பூஜையுடன் 2024 மே மாதம் 17 ஆம் தொடங்கியது.அம்மாத இறுதியிலேயே அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.
இப்போது மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இயக்குநர் விகர்ணன் அசோக் படத்தை முழுமையாகத் தொகுத்து வைத்துவிட்டாராம். அதை இயக்குநர் வெற்றிமாறன் பார்த்துவிட்டு சம்மதம் சொன்னால் போதும் என்கிற நிலையில் இருக்கிறதாம்.
வெற்றிமாறன் இப்போது அவர் தயாரித்திருக்கும் இன்னொரு படமான மனுஷி படத்தின் இறுதிக்கட்ட வேலைகளைக் கண்காணித்து அதை வெளியீட்டுக்குத் தயாராக்கும் முனைப்பில் இருக்கிறாராம்.
அவ்வேலைகளை முடித்துவிட்டு இந்தப்படத்தைப் பார்க்கவிருக்கிறார் என்றும், இப்போது இருப்பது அப்படியே சரி என்று சொல்லப்போகிறாரா? அல்லது திருத்தங்கள் சொல்லப்போகிறாரா? என்பதுதான் கேள்வி.அதையொட்டி அடுத்தடுத்த வேலைகள் விரைவாக நடந்துவிடும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் படத்தின் வியாபாரம் பேசும் வேலைகளும் தொடங்கிவிட்டன.
இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையின் விலை சுமார் பத்துகோடி என்று சொல்லியிருக்கிறார்கள்.எம்.ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறதாம் இந்தவிலை.
கவினின் முந்தைய படமான ப்ளடி பெக்கர் திரையரங்குகளில் சரியாகப் போகவில்லை என்றாலும் கூட இந்த விலைக்கு இந்தப்படத்தை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனராம்.
அதற்குக் காரணம்,ப்ளடி பெக்கர் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெறாவிட்டாலும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறதாம்.அது நாயகன் கவினுக்கான வெற்றி என்று சொல்கிறார்கள்.
இந்தப்படத்தில் கவின் மட்டுமின்றி கூடுதலாக இயக்குநர் வெற்றிமாறனின் பங்களிப்பும் இருப்பதால் நிச்சயம் திரையரங்குகளிலும் வரவேற்புப் பெரும் என்று நம்புகிறார்களாம்.
வியாபாரப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டால் அதற்குப் பின் பொருத்தமான வெளியீட்டுத் தேதி பார்த்து படத்தை வெளியிடத் திட்டமிடுகிறார்கள்.அதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம்.