சிம்பு பட இயக்குநர் மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோகிரீன் நிறுவனம் இன்று ஓர் அறிவிப்பை வெளீயிட்டுள்ளது.
அதில், நாளை அந்நிறுவனத்தின் 20 ஆவது தயாரிப்பாக சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்க சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கவிருப்பதாகவும் அப்படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்தார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வந்தனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.
இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜூன் 15 இல் தொடங்கியது.
படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில், பலத்த காற்று, சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் கனமழை எல்லாவற்றையும் நாங்கள் இன்று சந்தித்தாலும் நாங்கள் பின்வாங்கவில்லை, முன்னோக்கி சென்றுள்ளோம் என்று கவுதம்கார்த்திக் சொல்லியிருந்தார்.
ஆனால், திடீரென அந்தப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. கர்நாடகாவில் படப்பிடிப்பு நடந்த இடத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் சிம்பு வெளியேறிவிட்டார் அதனால் படப்பிடிப்பு நின்றுபோனது என்று சொல்லப்பட்டது.
அதன்பின் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் அப்படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
இப்போது அந்தப்படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.இயக்குநர் மாற்றத்துடன் கூடிய அந்தப்படம் பற்றிய அறிவிப்புதான் நாளை வெளியாகவிருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறதாம்.