டாடா இயக்குநரின் இரண்டகம் – தயாரிப்பாளர் அதிர்ச்சி
கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கணேஷ்கே.பாபு இயக்கத்தில் உருவான படம் டாடா.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த இப்படம் பிப்ரவரி 10 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
அதேநேரம் படம் வெளியான அன்றே, இயக்குநர் கணேஷ்கேபாபு, அடுத்த படத்தை இயக்க லைகா நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
அடுத்த படத்துக்கான கதை என்ன என்பது முடிவு செய்யப்படவில்லை, கதாநாயகன் யார்? என்று தெரியாது, எப்போது படம் தொடங்கும் என்பது யார் கையிலும் இல்லை.
இருந்தாலும் அவருக்கு ஒரு நல்ல தொகையை முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
ஓர்இயக்குநர் ஒரு படம் முடித்தால் அடுத்தபடம் இயக்கப்போவார் இது ஒரு செய்தியா? என்று கேட்கத் தோன்றும்.
செய்தி இனிமேல்தான்.
டாடா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருந்த போதே, அடுத்த படமும் நம் நிறுவனத்துக்கே இயக்குங்கள் என்று தயாரிப்பாளர் அம்பேத்குமார் சொல்லியிருக்கிறார்.
அதற்கு இயக்குநரும் சம்மதம் சொல்லியிருக்கிறார். உடனே அதற்காக ஒப்பந்தம் போட்டுவிடலாம் என்று தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள், வெளியீட்டு வேலைகள் ஆகியனவற்றால் ஒப்பந்தம் போடும் வேலை நடக்கவில்லை.
படமும் வெளியாகிறது. அன்றைய தினம், திரையரங்குகளிலிருந்து வருகிற நல்ல செய்திகளைக் கேட்டுக்கொண்டு படத்தை மேலும் பெரிதாக ஆக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த தயாரிப்பாளர், சமூக ஊடகங்கள் வழியாக இயக்குநர் கணேஷ்கேபாபு லைகா நிறுவனத்துக்குப் படம் இயக்க ஒப்பந்தம் கையெழுத்தான செய்தியை அறிந்திருக்கிறார்.
அவருக்குப் பேரரதிர்ச்சியாம். காலைவரை நம்மோடு பேசிக்கொண்டிருந்தவர், ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் வேறு நிறுவனத்துக்குப் போய்விட்டார் என்பதே அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
வெறும் கணேஷ்கேபாபுவை இயக்குநர் கணேஷ்கேபாபு ஆக்கியவர் அம்பேத்குமார்.ஓர் அடையாளம் கிடைத்ததும் அவருக்கு இரண்டகம் செய்துவிட்டுப் போயிருக்கும் கணேஷ்கேபாபுவின் செயல் அறமற்றது என்று விசயமறிந்தவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.











