அட்டகாசக் கூட்டணியுடன் உறுதியானது ரஜினி 169
ரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது அவருடைய 168 ஆவது படம்.
இதர்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார்.
இதுதொடர்பாகச் சில மாதங்கள் முன்பாகச் செய்திகள் வந்தன. அதன்பின், ரஜினிக்கு ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கிறார். அந்தக்கதையில் ரஜினிக்கு முழுத் திருப்தி இல்லை. வியாபார அம்சங்களோடு கலந்த மாஸ் படம் நடிக்கவேண்டும் என்கிற ரஜினியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற கதையாக அது இல்லை.இன்னொரு ரஞ்சித் படம் போல் ஆகிவிடக்கூடாது என்று நினைத்த ரஜினி அந்தக்கதையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் என்று சொல்லப்பட்டது.
அதன்பின் ரஜினியின் விருப்பங்களை, சவுந்தர்யா ரஜினி மூலம் அறிந்து கொண்ட லோகேஷ்கனகராஜ், கதையில் பல மாற்றங்களைச் செய்து மீண்டும் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்.
இம்முறை ரஜினிக்கு அதில் திருப்தியேற்பட்டதாம். அதன்பின் கமலுடனும் பேசினாராம். அதன்விளைவு ரஜினியின் 169 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதும் அப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதும் உறுதியாகிவிட்டதாம்.
விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.இவ்வறிவிப்பு வெளியானால் ரஜினி, கமல் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவிருக்காது.











