ஜெயம்ரவியால் தடைபட்ட படப்பிடிப்பு – தொழிலாளர்கள் வேதனை
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,தனது, ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம், இராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் பென்ஸ் படத்தைத் தயாரித்து வருகிறார்.இந்தப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரிக்கிறார்.இப்படத்தில் எதிர்மறை நாயகனாக மலையாள நடிகர் நிவின்பாலி நடிக்கிறார்.
இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜே எழுதியிருக்கிறார்.இப்படத்தை ரெமோ,சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.
பென்ஸ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14,2024 அன்று வெளியானது.
அதன்பின்,பல்வேறு சிக்கல்கள் மற்றும் தடைகளைத் தாண்டி படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில்,இந்தப்படத்தில் புதிதாக ஒரு முக்கியவேடத்தில் நடிகர் ஜெயம்ரவி ஒப்பந்தமானார் என்று சொல்லப்பட்டது.ஆனால் அவர் அந்தப்படப்பிடிப்பில் இதுவரை கலந்துகொள்ளவில்லை என்றும் சொன்னார்கள்.
மே 18 ஆம் தேதி முதல் இப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால்,திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.
ஏன்?
இந்தப்படப்பிடிப்பில், நடிகர் ஜெயம்ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.அதுகுறித்து அவரிடம் சொல்லி அவருடைய சம்மதம் பெற்று அவர் சொன்ன தேதியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.
திடீரென,சில நாட்களுக்கு முன்பு குடும்பச் சிக்கல் காரணமாகக் கொதித்தெழுந்து ஒரு கண்ணீர் பேட்டி கொடுத்தார் ஜெயம்ரவி.அப்போது,என் மனைவியிடமிருந்து எனக்கு மணவிலக்கு கிடைக்கும்வரை நடிக்கமாட்டேன் என்று சொன்னார்.
அவர் இப்போது சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன்மூலம், ப்ரோ கிளப் மற்றும் ஆரிடினரி மேன் ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார்.அவற்றில் ஒரு படத்தில் அவர் நடிக்கிறார்.இன்னொரு படத்தை இயக்குகிறார்.
இந்தச் சிக்கல் முடியும்வரை நடிக்கமாட்டேன் என்று அவர் சொன்னபோது இவ்விரண்டு படங்களும்தான் பாதிக்கப்படும் என்று பலரும் நினைத்தனர்.
அதற்கே,இந்தச் சிக்கலுக்கும் நடிப்புக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் இப்படிச் சொல்கிறார்? என்கிற விமர்சனங்களும் வந்தன.
இப்போது,இன்னொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பும் இவரால் தடைபட்டிருக்கும் செய்தி வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு,மே 18 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் நமக்கு வேலை இருக்கிறது என்கிற மகிழ்ச்சியில் இருந்த தொழிலாளர்கள்,ஜெயம்ரவியால் அது தடைபட்டிருக்கிறது என்று தெரிந்து நொந்து போயிருக்கிறார்களாம்.திடீரென படப்பிடிப்பை இரத்து செய்வதால் ஜெயம்ரவிக்கு எந்தச் சிக்கலும் இல்லை,ஆனால்,நாங்கள் அன்றாடம் வேலை செய்தால்தான் எங்கள் குடும்பம் சாப்பிடமுடியும்.ஆனால் அவருடைய தனிப்பட்ட சிக்கலுக்காக படப்பிடிப்பை இரத்து செய்திருப்பதால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று வேதனைப்படுகிறார்கள்.











