ரெட்ட தல வெளியீட்டுத் தேதி மாற்றம் – காரணங்கள்
மான் கராத்தே,கெத்து ஆகிய படங்களின் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இப்போது இயக்கியிருக்கும் படம் “ரெட்ட தல”. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு – டிஜோ டாமி, படத்தொகுப்பு – ஆண்டனி, சண்டைப் பயிற்சி – பிசி ஸ்டண்ட்ஸ்,கலை இயக்கம் – அருண்சங்கர் துரை,உடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர்
இப்படத்தினை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன், அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.
இப்படம் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றி அறிவித்துள்ளது படக்குழு.அதன்படி இப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த மாற்றம் எதனால்?
டிசம்பர் 18 ஆம் தேதி என்று இப்படக்குழு அறிவித்த நேரத்தில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் எல் ஐ கே படம் வெளியாகாது எனும் நிலையில் இருந்தது.ரெட்ட தல அறிவிப்புக்குப் பின் எல் ஐ கே படம் வெளியாவது உறுதி என்று சொல்லப்பட்டது.
அதுமட்டுமின்றி, டிசம்பர் 19 ஆம் தேதி ஆங்கிலத் திரைப்படம் அவதார் வெளியாகிறது.இந்தப் படங்களோடு திரையரங்குகளைப் பகிர்ந்து கொண்டால் குறைவான அளவே அரங்குகள் கிடைக்கும் என்ற நிலை.
இன்னொரு பக்கம் டிசம்பர் 23 ஆம் தேதி பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.அந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் அதிக வரவேற்பு இருக்கும் என்பதால் டிசம்பர் 25 ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தேதி மாற்றம் இன்னொரு பரபரப்புப் பேச்சையும் கிளப்பிவிட்டிருக்கிறது.
அது என்ன?
ரெட்டதல பட வெளியீட்டின்போது எல் ஐ கே படத்தை வெளியிட்டு போட்டியை ஏற்படுத்தியது செவன் ஸ்கிரீன் நிறுவனம்.அதே நிறுவனத்தின் இன்னொரு படமான சிறை டிசம்பர் 25 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அந்தத் தேதியில் ரெட்ட தல படம் வெளியாகிறது என்பதால் சிறை படம் பின்னால் போய்விடும்.
18 ஆம் தேதி போட்டிக்கு வந்ததால் அந்த நிறுவனத்தைப் பழிக்குப்பழி வாங்கிவிட்டது ரெட்ட தல என்று பேசிக்கொள்கிறார்கள்.











